பொதுப் போக்குவரத்தில் 90%மான பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ….. – UNFPA

235 0

இலங்கையின் பொதுப்போக்குவரத்து பஸ் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் 90%மான பெண்களும், சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும், அவர்களின் 4%மான பெண்கள் மாத்திரமே பொலிஸாரின் உதவியை நாடுவதாகவும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தினால் (UNFPA) நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தேசிய முன்னுரிமையின் அடிப்படியில், இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, பிரதமர் அலுவலகம், இலங்கை பொலிஸ் ஆகியவற்றுடன் இணைந்து UNFPA அமைப்பு ‘ அவளின் பயணம் பாதுகாப்பானதா?’ எனும் தொனிப்பொருளில் பொதுமக்களை அறிவூட்டும் ஒரு பிரச்சார நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போது பொதுப் போக்குவரத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அதற்கான கொள்கைப் பரிந்துரைகள் உள்ளிட்ட முன்மொழிவுகளுடனான கொள்கைச் சுருக்கத்தை UNFPA வெளியிட்டு வைத்தது.

அதேவேளை பொதுப்போக்குவரத்தின் போது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்களுக்கு இடம்பெறுமாயின் அது தொடர்பில் உடனடியாக 119 என்ற இலக்கத்தின் ஊடாக இலங்கை பொலிஸுக்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது