அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கு சென்னை வருமாறு ‘திடீர்’ அழைப்பு

259 0

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் இன்று சென்னைக்கு வரவேண்டும் என்று திடீரென அழைக்கப்பட்டுள்ளனர். கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று தெரிகிறது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க. பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்ட சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த இக்கட்டான நிலையில், அ.தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி.தினகரன் பதவி ஏற்றுக்கொண்டார். ஆனால், அ.தி.மு.க.வில் மற்றொரு அணிக்கு தலைமை தாங்கிய முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது கரத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

அதுமட்டுமல்லாமல், அ.தி.மு.க. சட்டத்திட்டப்படி தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சொல்லி தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது உரிய பதிலை 28-ந்தேதிக்குள் (நாளை) அளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் கடந்த 17-ந்தேதி நோட்டீசு அனுப்பியது.

அதன் பின்னர், சிறையில் உள்ள சசிகலாவை அவரது அக்காள் மகன் டி.டி.வி.தினகரன் மட்டுமே சென்று சந்தித்துள்ளார். தற்போது, அவரே தேர்தல் ஆணையத்திற்கு பதில் அளிப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளார். சட்ட வல்லுநர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். எனவே, இன்றைக்குள் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டிய பதிலை தயார் செய்து, அதில் சசிகலாவின் கையெழுத்தை பெறுவதற்காக இன்று மாலை டி.டி.வி.தினகரன் பெங்களூரு செல்வார் என்று கூறப்படுகிறது.

இதற்கான வேலை ஒருபுறம் நடந்தாலும், மற்றொரு புறம் அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு நிர்வாகிகள் செல்வதை தடுக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. இதற்கிடையே நேற்று முதல் அ.தி.மு.க. நிர்வாகிகளை மாவட்ட வாரியாக ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க தொடங்கியிருக்கிறார்.

இதனால், சற்று அதிர்ச்சி அடைந்துள்ள டி.டி.வி.தினகரன் தரப்பு, நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களை இன்று சென்னைக்கு அவசரமாக அழைத்துள்ளது. நிர்வாக வசதிக்காக 50 மாவட்டங்களாக பிரித்து அ.தி.மு.க.வில் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதில் பெரும்பாலானவர்கள் சென்னை வருவார்கள் என்று தெரிகிறது. அதே நேரத்தில், அழைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து அவர்களுக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இது ரகசிய கூட்டமாக இருக்கும் என்பதால், போயஸ் கார்டன் இல்லத்திலேயே டி.டி.வி.தினகரன் தலைமையில் நடக்கும் என்று தெரிகிறது. கூட்டத்தில், மாவட்ட வாரியாக உள்ள செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவிச்செல்வதை மாவட்ட செயலாளர்கள் தடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.