எம்.ஜி.ஆர், அம்மா, தீபா பேரவை நிர்வாகிகளின் இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று ஜெ.தீபா கூறினார்.
தனது வீட்டை ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து நேற்று மதியம் ஜெ.தீபா நிருபர்களிடம் கூறுகையில், “எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை மாநில நிர்வாகி ஏ.வி.ராஜாவை மாற்றவேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் முழுமையான இறுதிப்பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. வெளியாகி இருப்பது தற்காலிக பட்டியல்தான். முழுமையான நிர்வாகிகள் பட்டியல் நாளை(இன்று) மாலை 5 மணிக்கு வெளியிடப்படும். பேரவைக்கு செயலாளராக நான் (ஜெ.தீபா) தான் இருப்பேன்” என்றார்.
பின்னர் ஜெ.தீபாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- பேரவை நிர்வாகிகளை மாற்றவேண்டும் என்று கூறும் ஆதரவாளர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்:- தற்போது வெளியானது இறுதிப்பட்டியல் இல்லை. இறுதிப்பட்டியல் வெளியாகும் வரை அனைவரும் பொறுமை காக்கவேண்டும்.
கேள்வி:- பேரவைக்கு உங்கள் கணவர் மாதவனை செயலாளராக நியமிக்க வேண்டும் என்று உங்களது ஆதரவாளர்கள் கூறுகிறார்களே?
பதில்:- எனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் பொறுப்புகளுக்கு வரமாட்டார்கள். என்னுடன் அரசியல் களத்தில் பயணிப்பவர்கள்தான் நிர்வாகிகளாக வருவார்கள். அதற்காகத்தான் இந்த அமைப்பை உருவாக்கினேன். பொதுமக்கள், தொண்டர்கள் விருப்பம்போல் செயல்படுவோம்.
கேள்வி:- முறைகேட்டில் ஈடுபட்டவரை எப்படி பேரவை நிர்வாகியாக நியமித்தீர்கள்?
பதில்:- அரசியல் பயணத்தில் அனைவரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். நிர்வாகிகள் இருவரும் என்னுடைய நண்பர்கள்தான்.
கேள்வி:- உங்களுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்று கூறப்படுகிறதே, இந்த நிலையில் எப்படி நிலைமையை சமாளிப்பீர்கள்?
பதில்:- முதலில் இந்த தீபா யார் என்று பலருக்கு தெரியாது. குறுகிய காலத்தில் அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளேன். நான் அரசியலில் இருக்க கூடாது என்பதற்காக பலர் பின்னால் இருந்தவாறு பல்வேறு தொந்தரவுகளையும், தடைகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த தடைகளை அகற்றிவிட்டு தொடர்ந்து மக்கள் பணி செய்து வருகிறேன். எனவே இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.
கேள்வி:- உங்களுக்கு தடைகளை யார் ஏற்படுத்துகிறார்கள்?
பதில்:- குழப்பநிலையை பலர் உருவாக்கி வந்தாலும், அவர்கள் யார் என்று புகார் கூற விரும்பவில்லை.
கேள்வி:- உங்களுடைய ஆதரவாளர்களாக இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.க் களுக்கு பேரவையில் பதவி ஒதுக்கப்படுமா?
பதில்:- மாநில நிர்வாகிகள் குறித்த முடிவுகள் அனைத்தும் முழுமையாக ஓரிரு தினங்களில் தெரியவரும்.
கேள்வி:- அரசியலில் குதித்த நீங்கள் பா.ஜனதா மற்றும் தி.மு.க.வை எதிர்த்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லையே ஏன்?
பதில்:- இப்போதுதான் அரசியல் களத்தில் இறங்கி இருக்கிறேன். படிப்படியாக நீங்கள் எதிர்பார்க்கும் அறிக்கைகள் வெளிவரும்.
கேள்வி:- முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவேன் என்று கூறிய நீங்கள் தற்போது புதிதாக பேரவையை தொடங்கி உள்ளர்களே?
பதில்:- ஊடகங்களில் அவர் என்னைப்பற்றி அடிக்கடி பேசியதை கவனித்து வந்தேன். இதற்காக மரியாதை நிமித்தமாகத்தான் அவரை சந்தித்தேன். அரசியல் பயணம் குறித்து எதுவும் அவரிடம் பேசவில்லை. வரும் காலங்களில் அவருடன் இணைந்து அரசியல் பயணம் மேற்கொள்வது குறித்து ஆலோசிப்போம்.
கேள்வி:- ஆர்.கே.நகர் தொகுதிக்கு எப்போது செல்வீர்கள்?
பதில்:- பொறுத்திருங்கள், காலம் நிறையவே இருக்கிறது.
கேள்வி:- உங்கள் சகோதரர் தீபக்கை பின்னால் இருந்து யார் இயக்குகிறார்கள்?
பதில்:- சசிகலா குடும்பத்தினர்தான் அவரை இயக்குகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். நேற்று மாலை தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் தீபா பேசும்போது, “உங்களுடைய ஆதரவை ஏற்று நானே பேரவைக்கு தலைமை ஏற்கிறேன். ஜெயலலிதா இருக்கவேண்டிய இடத்தில் யார் இருக்கவேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்” என்றார்.

