ஸ்டாலின் பற்றி விமர்சிக்க தினகரனுக்கு அருகதை இல்லை: தி.மு.க. எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன்

350 0

போயஸ்கார்டன் வீட்டை கபளீகரம் செய்த டி.டி.வி. தினகரன் திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் பற்றி அறிக்கை விட எந்தத் தகுதியுமே இல்லாதவர் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. துரை.சந்திரமோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவையாறு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் பதவியையும், ஜெயலலிதாவின் போயஸ் கார்டனையும் அபகரித்து அ.தி.மு.க.விலும், போயஸ் கார்டனிலும் “துண்டு” போட்டு அமர்ந்திருக்கும் டி.டி.வி. தினகரன் திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் பற்றி அறிக்கை விட எந்தத் தகுதியுமே இல்லாதவர் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அரசியல் தலைவர்களின் அறிக்கைகள், பேட்டிகளை அறிந்து கொள்வதற்கு, எல்.கே.ஜி. குழந்தைக்கு உள்ள தகுதி கூட இல்லாத டி.டி.வி. தினகரன் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் “டங் ஸ்லிப்” ஆகி வெளிவரும் வார்த்தைகளுக்கு “உள்நோக்கம்” கற்பித்து, அரை வேக்காட்டுத் தனமாக அறிக்கை விடுவது அ.தி.மு.க.விற்குள் ஆக்கிரமித்த இடத்தை எங்கள் தங்க தளபதியை விமர்சித்தாவது தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்று நினைத்து அறிக்கை விடுவதில் “கின்னஸ் சாதனை” புரிந்து விட்டார் என்றே தோன்றுகிறது.

முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தைப் பயன்படுத்தி, அந்நிய செலவாணி குற்றம் புரிந்து காபிபோசாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் அரசியலில் “நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான்” என்பதை ஏனோ அவர் உணர மறுக்கிறார்.

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “டிடிவி தினகரன் காபிபோசா சட்டத்தில் கைதானபோது தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவிலும், அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் போதும் தன்னை இந்தியர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அந்நிய செலவாணி மோசடி தொடர்பான இந்த வழக்கில் தன்னை சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர் என மாறுபட்ட வாக்கு மூலம் அளித்துள்ளார். உண்மையில், அவரது கணக்குக்கு வந்துள்ள பெரும் தொகை அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலமாகப் பெறப்படவில்லை.

அதேபோல இந்தப் பணம் இங்கிலாந்தில் உள்ள நிறுவனத்தில் சட்டப்படி டெபாசிட் செய்யப்பட வில்லை என்பதை அமலாக்கத் துறை சரியாக நிரூபித்துள்ளது. மேலும் அந்த பெரும் தொகை வியாபாரத்தின் மூலமாகத்தான் ஈட்டப்பட்டது என்பதற்கும் எந்தவொரு ஆதாரமோ, ஆவணமோ இல்லை.

எனவே அந்நிய செலவாணி மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக அமலாக்கத்துறை ரூ. 28 கோடி அபராதம் விதித்தது. இதில் தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்ததை மறந்து விட்டு “நானும் அரசியல்வாதிதான்” என்ற நினைப்பில் அறிக்கை விட்டு தளபதியுடன் மோதுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

டி.டி.வி. தினகரன் வெளியேற்றப்பட்ட கட்சிக்குள் எப்படி முதலில் உள்ளே புகுந்தார்? சொத்துக்கு உள்ள உண்மையான சட்ட பூர்வ வாரிசுகளை விரட்டி அடித்து விட்டு எப்படி போயஸ் கார்டனை ஆக்கிரமித்தார்? சசிகலாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதும் கூவத்தூரிலேயே வைத்து மிரட்டி எப்படி அதிமுகவில் துணை பொதுச் செயலாளர் பதவியை வாங்கினார்? என்பது சம்பந்தமான “வண்டவாளங்கள்” எல்லாம் ஒவ்வொன்றாக “தண்டவாளத்தில்” ஏறிக் கொண்டிருக்கிறது.

“அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.விற்கு தலைமை தாங்க என்ன தகுதி இருக்கிறது?” என்று நெற்றியாக கேள்வி கேட்டிருக்கும் மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஏன் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போன்றவரின் கேள்விகளுக்கு இதுவரை பதில் அளிக்க வக்கில்லாத “அந்நியச் செலவாணி மோசடி புகழ்” தளபதியின் பேட்டிக்கு அவசர கதியில் ஒரு அறிக்கையை விட்டு அ.தி.மு.க. அரசியலில் தனக்கு ஏதாவது ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு விட முடியுமா என்று முயற்சிப்பது “மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட” நினைக்கும் அவரது பகல் கனவு என்று சுட்டிக்காட்ட விரும்பும் அதே நேரத்தில் அந்த கனவு அது அறவே பலிக்காது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.