சென்னையில் கட்டிட அனுமதிக்கு மாறாக விதிகளை மீறி கட்டுமானம் நடைபெற்ற 1,124 இடங்களில் இருந்த கட்டுமானப் பொருட்களை மாநகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்தது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடமற்றும் திட்ட அனுமதி பெறுபவர்கள், அதில் குறிப்பிட்டுள்ளவாறு அளவு, விவரக் குறிப்பின்அடிப்படையில்தான் கட்டிடங்களை கட்ட வேண்டும்.
அனுமதியில் குறிப்பிடப்படாத,விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் கண்டறியப்பட்டு, உரிமையாளர்களுக்கு குறிப்பாணை வழங்கப்படும். மேலும், தகுந்த விவரங்கள், போதிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் தொடர்புடைய கட்டிடத்தைமூடி சீல் வைக்க குறிப்பாணைவழங்கப்பட்டு, குறிப்பிடப்பட்டகாலக்கெடுவுக்கு பிறகு மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல்வைக்கப்படும்.
அதனடிப்படையில், கடந்த ஜன.1முதல் 11-ம் தேதி வரை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் தொடர்புடைய பொறியாளர்கள் மூலம்கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அனுமதிக்கு மாறாக விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டுமான இடங்களில் 327 உரிமையாளர்களுக்கு கட்டுமானப் பணிகளை நிறுத்தவும், 181 உரிமையாளர்களுக்கு கட்டுமான இடம் பூட்டிசீல் வைக்கப்படும் என குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாணை வழங்கியபின், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விதிமீறல்களை திருத்திக் கொள்ளாத 10 கட்டுமான இடங்கள் பூட்டிசீல் வைக்கப்பட்டுள்ளன. கட்டிடஅனுமதிக்கு மாறாக விதிமீறி கட்டப்பட்டுள்ள இடங்களில், கட்டுமானப் பணியை நிறுத்த குறிப்பாணை வழங்கப்பட்டது. அதன்பிறகும் கட்டிட அனுமதியின்படி திருத்தம் மேற்கொள்ளாத 1,124 இடங்களில் கட்டுமானப் பொருட்கள் மாநகராட்சி அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
1882 கழிவுநீர் இணைப்பு துண்டிப்பு: அதேபோல மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் விதிகளை மீறி கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த டிச.31 முதல்ஜன.10-ம் தேதி வரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளகுடியிருப்புகள், நிறுவனங்களில் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விதிகளை மீறி 1,882 கழிவுநீர் இணைப்புகள் அமைக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து விதிமீறல் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து34 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

