புதிய கூட்டணிக்குள் முரண்பாடு ?

102 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்து கை சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது.

புதிய கூட்டணியில் வேட்புமனு தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுதந்திர கட்சியின் பேச்சாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அநுராதபுரம் தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்திய பின்னர் சு.க. பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் ,

நாம் கூட்டணியமைத்து பொது சின்னத்தில் தேர்தலில் போட்டியிட தீர்மானித்த போதிலும் , தற்போது அதில் பல்வேறு சிக்கல்கள் தோற்றம் பெற்றுள்ளன. வேட்புமனு தாக்கலுக்கான பட்டியலை தயார்ப்படுத்தல் உள்ளிட்டவற்றில் இவ்வாறான சிக்கல்கள் தோற்றம் பெற்றுள்ளன.

பலரது அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே ரெஜினோட்ல் குரே வேட்புமனு தாக்கலுக்கான பெயர் பட்டியலை தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்திருந்தார். இந்த சந்தர்ப்பத்திலேயே திடீர் சுகவீனமுற்று அவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறான கடுமையான சவால்களைக் கூட சு.க. இன்று எதிர்நோக்கியுள்ளது.

இந்நிலையிலேயே கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற சு.க. அரசியல் குழு கூட்டத்தில் தேர்தலில் தனித்து போட்டியிடுவது சிறந்தது என்று தீர்மானிக்கப்பட்டது. ஏற்கனவே சுதந்திர கட்சியை அடிமைப்படுத்த முயற்சித்தவர்களே , வேறு கோணத்தில் மீண்டும் உள் நுழைந்து சதித்திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சுதந்திர கட்சியின் பெயரை உபயோகித்துக் கொண்டு சிலர் புதிய அரசியல் கட்சியை உருவாக்குவதற்கு சதி செய்து கொண்டிருக்கின்றனர். புதிய கூட்டணி அமைக்கப்பட்ட போதிலும் , பொது செயலாளர் பதவி அவர்களிடமே காணப்படுகிறது. அவ்வாறெனில் கூட்டணி தலைமைத்துவ உரிமையும் அவர்களிடமே உள்ளது.

எனவே தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் பின்னர் , தேவையேற்படின் உள்ளுராட்சி மன்றங்களுக்குள் கூட்டணியமைக்க முடியும் என்றார்.