அரசியல்வாதிகளின் அனுசரணையுடனே அரசகாணிகள் சுவீகரிக்கப்படுகின்றது – யோகேஸ்வரன்

239 0

துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்ட நிலையில் மக்கள் ஓரளவு நிம்மதியாக வாழ்வைக் கொண்டு செல்லும் இக்காலகட்டத்தில் திடீரென ஏற்பட்டுள்ள இத்துப்பாக்கிச் சூடு மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி சம்மந்தமான பிரச்சனைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

அரசகாணிகளை சில அரசியல்வாதிகளின் அனுசரணையோடும், சில அரச அதிகாரிகளின் ஆலோசனையிலும், சுவீகரிக்கின்ற நடவடிக்கைகள் நடந்தேறிவருகின்றன
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளரான நேசகுமாரன் விமல்ராஜ் மீது புதன்கிழமை இரவு மட்டக்களப்பு களுதாவளை 4 ஆம் பிரிவில் சோமசுந்தரம் வீதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தைக் கண்டித்து இன்று காலை களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் சிலை முன்பாக பட்டிருப்புத் தொகுதி தமிழ் சமூகம், எனும் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு புன்னக்குடா பிரதேசத்தில் காணிப்பிரச்சனைகள் உள்ளன அந்தக் காணி விடையங்கள் தொடர்பில் எம்மினம் சாராத ஒரு அரசியல்வாதி அக்காணி தங்களுடைய இனம் சார்ந்தவர்களுக்குச் சொந்தமானது என்று நாடாளுமன்றத்திலே பேசிஇருக்கின்றார்.

புன்னக்குடா காணிப்பிரச்சனை தொடர்பில் நேசகுமாரன் விமல்ராஜ் நியாயமாகச் செயற்பட்டிருந்தார்.

இதன்பிற்பாடு அவருக்கு பல பிரச்சனைகள் தோன்றியிருக்கின்றன.

காணி விடயத்தில் நாம் மிகவும் அவதானமாக இருக்கின்ற இக்காலகட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளரான நேசகுமாரன் விமல்ராஜ் மீது புதன்கிழமை இரவு இனம்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடையம் தொடர்பில் நாம் ஆராயவேண்டியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் தங்களது காணிப்பிரச்சனைகள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்கின்போது அப்பிரச்சனைகள் தொடர்பில் கவனத்தில் எடுப்பது மிகக் குறைவாக இருக்கின்றன.

இவ்விடயங்கள் தொடர்பில் வியாழக்கிழமை நாடாளுமன்றிலே காணி அமைச்சருக்கு முன் கேள்வி எழுப்பி பேசியுள்ளேன்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்மபவம், அரசகாணிகள் சுவீகரிக்கப்படுகின்ற விடையங்கள், போன்ற விடையங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளேன்.

எனவே காணிப்பிரச்சனை தொடர்பில்தான் நேசகுமாரன் விமல்ராஜிக்கு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என எமக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.

இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதனை யார் செய்துள்ளார்களோ அவர்களைக் கண்டுபிடிக்க பொலிசார் துரித நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

எனவே இந்த கடமையாவது பொலிசார் மேற்கொள்வார்களா எனவும் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.