அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம்: டி.டி.வி.தினகரன் பேட்டி

348 0

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற பன்னீர்செல்வம் உள்பட யார் திரும்பி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக கடந்த 15-ந் தேதி டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அவர் நேற்று பொறுப்பேற்றார்.

அவருக்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அம்மாவின் (ஜெயலலிதா) ஆட்சி தொடர்ந்து நடைபெறும் என்பதை உறுதியோடு தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு டி.டி.வி.தினகரன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சட்டசபையில் நடந்தது பற்றி மு.க.ஸ்டாலின், ஜனாதிபதியிடம் சொல்வதாக கூறி இருக்கிறாரே? அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- சட்டசபையை விதிகளுக்குட்பட்டு தான் சபாநாயகர் நடத்தினார். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது அங்கே கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கலைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். அவருடைய முயற்சியை அ.தி.மு.க. எம்.எல் .ஏ.க்கள் அனைவரும் அம்மாவின் போர்வீரர்களாக ராணுவ கட்டுப்பாடோடு செயல்பட்டார்கள். தொடர்ந்து தமிழகத்திலே ஜெயலலிதாவின் ஆட்சி சீரோடும், சிறப்போடும் நடைபெறும்.

கேள்வி:- சசிகலா குடும்பத்தினர் அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்துள்ளார். குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் இருக்காது என்று நீங்கள் சொல்ல முடியுமா?

பதில்:- மு.க.ஸ்டாலின் மாத்திரம் அல்ல. பல எதிர்க் கட்சிகள் இதுபோல் பொய் பிரசாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி என்பது 1½ கோடி தொண்டர்களால் நடத்தப்படும் ஆட்சி. இதில் எந்த ஒரு தனிநபரோ குடும்பமோ என்றைக்குமே தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தியதும் இல்லை. வருங்காலத்திலும் ஆதிக்கம் செலுத்த நாங்கள் விடமாட்டோம்.

கேள்வி:- நீங்கள் திடீரென்று கட்சிக்கு வந்ததாக பரவலாக பேசப்படுகிறது. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- நான் ஜெயலலிதாவால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவன். 1999-ம் ஆண்டு நடந்த எம்.பி. தேர்தலில் வேட்பாளராக நின்று ஜெயலலிதாவாலும், இயக்க தொண்டர்களாலும் வெற்றி பெறச் செய்யப்பட்டு 11 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்றி இருக்கிறேன். ஜெயலலிதாவால் புரட்சி தலைவி பேரவை செயலாளராகவும், அமைப்பு செயலாளராகவும், பொருளாளராகவும் பணிசெய்து இருக்கிறேன்.

கேள்வி:- உங்கள் ஆட்சியின் மீது மக்கள் கோபம் அதிகமாகி கொண்டு இருக்கிறதே? இதை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்?

பதில்:- அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. செயற்கையாக சில வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள் மூலம் எதிரிகள் திட்டமிட்டு பரப்பி இருக்கும் செயல். என்றென்றைக்கும் அ.தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்பார்கள்.

கேள்வி:- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்களுக்கும், அவர்கள் வந்து செல்லும் இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது ஏன்?

பதில்:- தி.மு.க.வினர் பொதுமக்கள் என்ற போர்வையிலே பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி வருகிறார்கள். மக்கள் அமைதி யாகத் தான் இருக்கிறார்கள்.

கேள்வி:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா?

பதில்:- கட்சி யாரை முடிவு செய்கிறதோ அவர் தான் வேட்பாளர்.

கேள்வி:- சசிகலாவை தமிழகத்தில் உள்ள சிறைக்கு கொண்டு வர அ.தி.மு.க. தரப்பில் இருந்து எதுவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?

பதில்:- அதுபோன்ற எந்த முயற்சியும் நாங்கள் இதுவரை எடுக்கவில்லை.

கேள்வி:- அ.தி.மு.க. சட்ட விதிகள்படி தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவி கிடையாது. துணை பொதுச்செயலாளரை நியமித்ததும் செல்லாது என்று மதுசூதனன் சொல்லி இருக்கிறார். உங்கள் பதில் என்ன?

பதில்:- சசிகலா கழக சட்ட விதிகளின்படி தான் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல அறிவிப்புகள், நியமனங்கள், நீக்கங்கள் செல்லும் என்பது மதுசூதனனுக்கு நன்றாக தெரியும். காலத்தின் கட்டாயத்தில் தான் அவர் இப்படி சொல்கிறார்.

கேள்வி:- கட்சி கணக்குகளை முடக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வங்கிகளுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறாரே? அதுகுறித்து வங்கிகள் உங்களிடம் விளக்கம் கேட்டதா?

பதில்:- கட்சியின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவர் எந்த கடிதம் கொடுத்தாலும் செல்லாது. தற்போது கட்சியின் வங்கி கணக்குகள் பொருளாளர் சீனிவாசனால் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- ஜெ.தீபாவை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- அவரை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.

கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சிதாவல் தடை சட்டத்தில் புகார் தெரிவிக்க வாய்ப்பு உள்ளதா?

பதில்:- பொறுத்து இருந்து பாருங்கள்.

கேள்வி:- ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை தலைமைக் கழகத்தில் எப்போது வைக்கப்படும்?

பதில்:- அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

கேள்வி:- நிலக்கோட்டை எம்.எல்.ஏ. நீங்கள் முதல்- அமைச்சராக வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- கட்சியில் இருப்பவர்கள் ஏதோ ஒரு ஆர்வத்தில் சொல்வார்கள். அதையெல்லாம் பெரிதுபடுத்தக்கூடாது. அது அவர்களுடைய சொந்த கருத்து. எங்கள் இயக்கத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அவர் தான் தமிழகத்தின் முதல்-அமைச்சர்.

கேள்வி:- இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழலில் அ.தி.மு.க.வின் பிரதான எதிரி மு.க.ஸ்டாலினா?, ஓ.பன்னீர்செல்வம் அல்லது அவருடைய கூட்டணியா?

பதில்:- எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து தி.மு.க. தான் எங்கள் பிரதான எதிரி. அ.தி.மு.க. தோற்றுவிக்கப்பட்டதே தி.மு.க.வுக்கு எதிராகத் தான்.

கேள்வி:- கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பீர்களா?

பதில்:- தாய்க்கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யாராக இருந்தாலும் மீண்டும் வந்து சேருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் திரும்பி வந்தாலும் சேர்த்துக்கொள்வீர்களா?

பதில்:- யாராக இருந்தாலும் அவர்கள் திரும்பி வந்தால் அவர்களை தாய்மனதோடு ஏற்றுக்கொள்வோம்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.