சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் உள்ள முக்கிய நகருக்குள் குர்தீஸ் படை புகுந்தது

250 0

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் உள்ள பெரும்பாலான இராணுவம் மீட்டு உள்ள நிலையில ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய நகருக்குள் குர்தீஸ் படை புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவர்கள் பிடியில் உள்ள பகுதிகளை மீட்க இரு நாட்டு படைகளும் தீவிரமாக போராடி வருகின்றன. இதற்கு அமெரிக்கா கூட்டு படைகள் மற்றும் ரஷியா ஆகியவை உதவி வருகின்றன.

ஈராக்கை பொருத்தவரை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த பெரும்பாலான பகுதிகளை ராணுவம் மீட்டு விட்டது. தற்போது ஈராக்கின் முக்கிய நகரமான மொசூல் மட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ளது.

அதை மீட்பதற்கு ஈராக் படைகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. நகரின் பெரும் பகுதியை படைகள் மீட்டு விட்டன. இன்னும் சில நாட்களில் நகரம் முற்றிலும் ராணுவம் வசம் வந்துவிடும். அதன் பிறகு ஈராக்கில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றிலும் விரட்டியடிக்கப்பட்டு விடுவார்கள்.

அதே நேரத்தில் சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருக்கும் பல பகுதிகள் மீட்கப்பட்டு விட்டன. அங்குள்ள பெரிய நகரமான ராக்கா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ளன. அவற்றை மீட்பதற்கு சிரியா ராணுவமும், அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் அரபு மற்றும் குர்தீஸ் படையும் போராடி வருகிறது.

சமீப காலமாக பல இடங்களில் இருந்தும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பின்வாங்கி வருகிறார்கள். கடந்த சில நாட்களில் மட்டும் 15 சிறிய நகரங்களை சிரியா ராணுவம் கைப்பற்றி உள்ளது.

ராக்கா அருகே டயர் அல் ஷோர் என்ற நகரம் உள்ளது. இது பெரிய நகரங்களில் ஒன்றாகும். இதுவும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில்தான் இருந்தது. இதை கைப்பற்றுவதற்காக குர்தீஸ் அரபு படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர். தற்போது அவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளை முறியடித்து அந்த நகருக்குள் புகுந்துள்ளனர். அவர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.

இந்த நகரம் முற்றிலும் கைப்பற்றப்பட்டு விட்டால் ராக்கா நகருக்கும், இந்த நகருக்கும் உள்ள தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும். இதனால் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு கடும் பின்னடைவு ஏற்படும். மேலும் ராக்கா நகரையும் தீவிரவாதிகள் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.