துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு.

259 0

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளர் நேசகுமாரன் விமல்ராஜின் மீது நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணிக்கு, மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் சிலை முன்பாக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டிருப்புத் தொகுதி தமிழ் சமூகம் எனும் அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக அரசாங்க அதிகாரிகள் மீது குறிவைத்து தாக்குதல்களை நடாத்துவதும், துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொள்ளும் சம்பவங்களும், மட்டக்களப்பில் இடம்பெற்று வருகின்றன.

கடந்த வருடம் மண்டூரில் ஒரு சமூகசேவை உத்தியோகஸ்த்தர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

களுவஞ்சிகுடியில் கிராசேவை உத்தியோகஸ்த்தர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தார்.

கிரானில் மற்றுமொரு கிராம சேவை உத்தியோகஸ்தர் தாக்கப்பட்டார்.

தற்போது காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளரான நேசகுமாரன் விமல்ராஜின் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எனவே தற்போது இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திதைக் கண்டித்து நாளை காலை களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் சிலை முன்றலில் கண்டன ஆர்ப்பாபட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்களைக் கைது செய்யுமாறு கோரி களுவாஞ்சிகுடி காவல்நிலையத்தில்  மனு  ஒன்று நாளைய தினம் கையளிக்கப்படவுள்ளது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், வர்த்தக பிரமுகர்கள், உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்குமாறும் பட்டிருப்புத் தொகுதி தமிழ் சமூகம் எனும் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.