தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலும் தமிழ் மக்கள் ஏமாற்றம் – சம்பந்தன்

239 0
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலும் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் மக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மனகசப்புகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள் தீர்வொன்று அவசியம் என்றே தாம் வலியுறுத்தி வருவதாக சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பல எதிர்பார்ப்புகள் இருந்தன.
இது தொடர்பான நடவடிக்கைகள் வெற்றியளிப்பதற்கு பல்வேறு ஒத்துழைப்புகளை தாம் வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணி பிரச்சினை, காணாமல்போனோர் விவகாரம், அரசியல் கைதிகள், உண்மை மற்றும் நல்லிணக்கம், இழப்பீடு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் மீள்நிகழாமை என்பன மாற்று நிலை நீதியின் அடிப்படை விடயங்களாக உள்ளன.
இந்த விடயங்கள் தீர்க்கப்பட வேண்டும்.
ஆனால், இவ்விடயத்தில் எமது மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்த விடயத்தில் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினைகளை கடந்த அரசாங்கத்தைப் போன்றே தற்போதைய அரசாங்கமும் கையாள்வதாகவே மக்கள் சந்தேகின்றனர்.
படையினர் தரப்பிலும் காணாமல்போனோர் இருக்கின்றனர்.
அவர்களது குடும்பத்தினருடன் பேசி அவர்களுக்கு தேவையான இழப்பீடுகள் உள்ளிட்டவற்றை அரசாங்கம் வழங்கியுள்ளதால் அவர்கள் போராடவில்லை.
ஆனால், அந்த வசதிகள் தமது மக்களுக்கு வழங்கப்படவில்லை.
அரசாங்கம் இதற்கு பதிலளித்து செயற்பட வேண்டும்.
உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட்டு இழப்பீடுகள் வழங்க வேண்டும்.
அரசின் நடவடிக்கைகளில் மக்களுக்கு முழுமையான திருப்தி இல்லாவிட்டாலும் கூட, ஓரளவாவது திருப்தியாக அமைய வேண்டும என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.