சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற விடமாட்டோம்: கர்நாடக அரசு வக்கீல் ஆச்சார்யா

232 0

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற விடமாட்டோம் என கர்நாடக அரசு வக்கீல் ஆச்சார்யா கூறினார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களுரு பரப்பன அக்ராஹரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சசிகலாவை பெங்களுரு சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்ற ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து அ.தி.மு.க. வக்கீல்கள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே கர்நாடக சிறைகளில் உள்ள வெளி மாநில கைதிகள் பலர் தங்களது மாநில சிறைகளுக்கு மாறுதல் வாங்கி சென்று உள்ளனர். விசாரணை கைதியை வேறு மாநில சிறைகளுக்கு மாற்ற முடியாது. தண்டனை பெற்ற கைதிகளுக்கு மட்டுமே இது பொருந்தும். என்றாலும் இரு மாநில ஒப்புதல் பெற வேண்டும். சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற தமிழக அரசு ஆட்சேபம் தெரிவிக்காது. ஏனெனில் இங்கு அ.தி.மு.க. ஆட்சிதான் நடக்கிறது. சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற கர்நாடகமும் ஆட்சேபம் தெரிவிக்காது என்று ஏற்கனவே கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி சத்தியநாராயணா கூறி உள்ளார்.

ஆனால் அவரை தமிழக சிறைக்கு மாற்ற ஆச்சார்யா கடும் ஆட்சேபம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் பெங்களுருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களுரு சிறையில் இருந்து சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சசிகலா வழக்கு சுப்ரீம்கோர்ட்டு மேற்பார்வையில் கர்நாடக தனிக்கோர்ட்டில் நடந்த வழக்காகும். எனவே அவரை தமிழக சிறைக்கு மாற்ற சுப்ரீம்கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும். நினைத்தவுடன் அவரை தமிழக சிறைக்கு மாற்ற முடியாது. தமிழக- கர்நாடக அரசுகள் இணைந்து இந்த வி‌ஷயத்தில் முடிவு எடுத்தாலும் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு இல்லாமல் அதை செயல்படுத்த மடியாது. தமிழக சிறைக்கு அவரை மாற்ற உத்தரவிட்டால் நாங்கள் கர்நாடக அரசு தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்வோம்.

மேலும் சசிகலா மறு சசீராய்வு மனு தாக்கல் செய்ய அடிப்படை ஆதாரங்கள் எதுவும் கிடையாது. அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டதால் ஜாமீன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. பரோலில் மட்டுமே வெளியே வரமுடியும்.அதுவும் 6மாதங்கள் சிறையில் இருந்த பின்பே அவர் வெளியே வர முடியும் . உறவினர்கள் இறப்பு அல்லது நன்னடத்தை காரணமாகத்தான் அவர் பரோலில் வரமுடியும்

இவ்வாறு அவர் கூறினார்.