பேருந்து கட்டணம் தொடர்பில் போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானிக்கும்

175 0

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் டீசல் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் , பேருந்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு சகல தரப்பினருடனும் கலந்துரையாடி இறுதி தீர்மானத்தை எடுக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (06) இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 12 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை எடுக்கும். அந்த 12 காரணிகளில் டீசல் விலை குறைப்பு ஒரு காரணி மாத்திரமேயாகும்.

எனவே ஏனைய காரணிகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி போக்குவரத்து ஆணைக்குழு , தனியார் பேருந்து சங்கங்களுடனும் கலந்துரையாடி சூத்திரத்திற்கு அமைய விலை திருத்தத்தை மேற்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் என்றார்.

திங்கட்கிழமை (05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டது. அதற்கமைய, ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை 420 ரூபாவாகும். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை குறைப்பிற்கு அமைய, ஐ.ஓ.சி. நிறுவனமும் ஒரு லீட்டர் டீசலின் விலையை 10 ரூபாவால் குறைத்துள்ளது.

இவ்வாறு டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் , தம்மால் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் என்பன அறிவித்துள்ளன.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் கெமுனு விஜேரத்ன இது தொடர்பில் தெரிவிக்கையில் , எரிபொருள் விலையில் நூற்றுக்கு 4 சதவீதம் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே பேருந்து கட்டணங்களிலும் திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

தற்போது 1.1 சதவீதம் மாத்திரமே எமக்கு விலை குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேருந்து கட்டணங்களை குறைப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றார்.

அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பொது செயலாளர்  அஞ்சன பிரியந்திரஜித் தெரிவிக்கையில் , இந்த மிகச் சிறிய விலை குறைப்பால் எம்மால் பேருந்து கட்டணத்தையும் குறைக்க முடியாது. 30 – 40 ரூபாவினால் டீசல் விலை குறைக்கப்பட்டால் மாத்திரமே எம்மால் பேருந்து கட்டணத்தையும் குறைக்க முடியும் என்றார்.