சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்

102 0

சீனாவில் மீண்டும் கரோனா தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அங்கு கரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவியது. சர்வதேச அளவில் இதுவரை 64.5 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 62.38 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 66.33 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் கரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளது. ஆனால் சீனாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த நாட்டில் தினசரி 30,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

வைரஸ் பரவலை தடுக்க தலைநகர் பெய்ஜிங் உட்பட முக்கிய நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் கரோனா தொற்று பூஜ்ஜியம் என்ற நிலையைத் தொடும்வரை கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் சீன அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சீன அரசின் கடும் கட்டுப்பாடுகளால் தனது தந்தையை இழந்த சாவோ என்ற இளைஞர் கூறும்போது, “ இந்த அரசு என் தந்தையை கொன்றுவிட்டது. உடல் நிலை சரியில்லாத என் தந்தையை கட்டுப்பாடுகள் காரணமாக உரிய நேரத்தில் மருத்துவமனை கொண்டு செல்ல முடியவில்லை. எனது தந்தையின் மரணத்துக்கு நீதி வேண்டும். ஏன் என்னை அடைத்து வைத்துள்ளீர்கள். ஏன் எனது தந்தையின் உயிரை பறித்தீர்கள்” என கண்ணீருடன் கேட்டுள்ளார்.

சாவோ மட்டுமல்ல சீனாவின் தீவிர கரோனா கட்டுப்பாடுகளுக்கு அந்நாட்டு மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த வாரம் காங்சாவோ நகரத்தில் மக்கள் கரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து சாலையில் போராட்டம் நடத்தினர். ”எங்களுக்கு சுதந்திரம் இல்லை என்றால் நாங்கள் இறக்கவும் தயார்” என்று சீன அரசை நோக்கி எதிர்ப்புக் குரல்களை எழுப்பினர். மக்களின் போராட்டத்துக்கு இதுவரை சீன அரசின் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.