கடும் குளிர் முழுமையான மின்சார துண்டிப்பு ஆனால் போரிடுவோம் – உக்ரைனின் முதல் பெண்மணி

276 0

கடும் குளிர், ரஸ்யாவின் தாக்குதல்களால் ஏற்பட்ட மின்துண்டிப்பு காரணமாக உருவாகியுள்ள இருள் போன்றவற்றையும் மீறி உக்ரைன் இந்த குளிர்காலத்தை தாக்குப்பிடிக்கும் என தெரிவித்துள்ள அந்த நாட்டின் முதல்பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா உலகின் கருத்துக்களின் யுத்தத்தில் தொடர்ந்தும் தனது நாடு ஈடுபடும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிபிசிக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் வெற்றியின்றி சமாதானம் சாத்தியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது

நாங்கள் மாடிகளை கொண்ட நகரத்தில் சந்தித்தோம் அங்கு குளிர்காலத்தின் குளிர் எங்களை தாக்கியது.

ரஸ்யா தொடர்ந்தும் உக்ரைனின் மின்கட்டமைப்புகளை இலக்குவைப்பதால் மின்துண்டிப்பிற்கு மத்தியில் இந்த நகரத்தின் கட்டிடங்கள் இருண்டவையாக குளிர்மிகுந்தவையாக காணப்படுகின்றன.

ரஸ்யாவின் மிகதீவிரமான கடுமையான தாக்குதல்களை எதிர்த்து தொடர்ந்தும் களத்தில் நிற்பதற்காக உக்ரைன் மக்கள் உலகின் பாராட்டுகளை பெற்றுள்ளனர்.

ஆனால் இது துணிச்சலிற்கான வலிமிகுந்த மற்றுமொரு சோதனை.

ஆனால் நாங்கள் இதனை எதிர்கொள்வதற்கு அனுபவிப்பதற்கு தயார் என்கின்றார் ஒலேனா ஜெலென்ஸ்கா.

உக்ரைன் தலைநகரில் கடும் பாதுகாப்புகளுடன் மண்மூட்டைகள் அடுக்கப்பட்ட கட்டிடமொன்றில் உரையாடுவதற்காக நாங்கள் அமர்ந்தவேளை அவர் இதனை தெரிவித்தார்.

நாங்கள் மிக மோசமான பல சவால்களை சந்தித்துள்ளோம்,பலர் கொல்லப்பட்டதை பார்த்திருக்கின்றோம்,பெருமளவு அழிவுகளை சந்தித்துள்ளோம்,நாங்கள் சந்தித்த விடயங்களில் மின்துண்டிப்பு என்பதே மிக மோசமான விடயமில்லை  என அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதென்றால் அடுத்த இரண்டு மூன்று வருடங்களிற்கு தாங்கள் இருளில் வாழ்வதற்கு தயார் என 90 வீதமான உக்ரைன் மக்கள் கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரிவித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் அது மிக நீண்ட குளிர்மிகுந்த பாதை என்பது அவருக்கு தெரியும்.

ஆனால் நீங்கள் எத்தனை கிலோமீற்றர் ஒடவேண்டும் என்பது தெரிந்தால் உங்களிற்கு மரத்தன் ஓடுவது சுலபம் என தெரிவிக்கும் உக்ரைனின் முதல் பெண்மணி ஆனால் உக்ரைனை பொறுத்தவரை எத்தனை கிலோமீற்றர் ஒடவேண்டும் என்பது அதற்கும் அதன் மக்களிற்கும் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சில நேரங்களில் இது மிகவும் கடினமானது ஆனால் சில உணர்ச்சிகள் எங்களை உறுதியாக பிடித்து வைத்திருக்க உதவுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த யுத்தம் காரணமாக உக்ரைனின் அனைத்து மக்களும் வலுவானவர்களாக மாறுவார்கள்  என முதல் பெண்மணி தெரிவிக்கின்றார்.

பிபிசியின் வருடாந்த 100 பெண்கள் நிகழ்விற்காக பதிவு செய்யப்பட்ட ஒரு மணிநேரத்திற்கு மேல் நீடித்த பரந்துபட்ட பேட்டியிலேயே  உக்ரைனின் முதல் பெண்மணி இதனை தெரிவித்தார்.

பெப்ரவரி மாதம் ரஸ்யாவின் தாக்குதல் ஆரம்பித்த பின்னர் தனது மக்களை அணிதிரட்டுவதற்காக உக்ரைன் ஜனாதிபதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையை இந்த கட்டிடத்திலேயே நிகழ்த்தியிருந்தார்( பெப்ரவரி26)

கையடக்க தொலைபேசியில் இந்த உரை பதிவாகியிருந்தது, நான் இங்கிருக்கின்றேன் நாங்கள் ஆயுதங்களை கைவிடமாட்டோம் என அவர் இந்த உரையில் தெரிவித்திருந்தார்.

அதற்கு முந்தைய நாள் இரவு ஆற்றிய உரையில் – இன்னொரு செல்பி உரையில் ஜெலென்ஸ்கி ரஸ்யா தன்னை முதலாவது எதிரியாகவும் தனது குடும்பத்தை இரண்டாவது எதிரியாகவும் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

ஆகவே முதல் நாளில் இருந்து  இது தொடர்கின்றது ஒலேனா தெரிவிக்கின்றார்.அவரது வார்த்தைகளால் அவரது குடும்பத்தின் மீதான அழுத்தங்களை  முழுமையாக மறைக்க முடியவில்லை.

உக்ரைனின் அனைத்து குடும்பங்களும் தற்போது எதிர்கொள்ளும் வலிகளை முதல் பெண்மணியின் குடும்பமும் எதிர்கொள்கின்றது.

தனது குழந்தைகளுடன் தான் எப்போது இறுதியாக இரவுநேரம் உணவருந்தினார் என்பது குறித்து சரியாக தெரிவிக்க முடியாத நிலையில் முதல் பெண்மணி காணப்படுகின்றார்.

அது தற்போது மிகவும் அபூர்வமான விடயமாக மாறிவிட்டது என முதல்பெண்மணி குறிப்பிட்டார்.

நான் எனது பிள்ளைகளுடன் தனியாக வாழ்கின்றேன் கணவர் ( ஜனாதிபதி) அவரது பணியிடத்தில் வாழ்கின்றார் என தெரிவித்த அவர் நாங்கள் சின்ன சின்ன  விடயங்களை கூடதவறவிடுகின்றோம்,என அவர் தெரிவிக்கின்றார்

உக்;ரைனின் அனைத்து மக்களினதும் வாழ்க்கை யுத்தம் காரணமாக தலைகீழாக மாறிவிட்டது, பொறியியலாளர்கள் முதல் நடன கலைஞர்கள் முதல் தற்போது போர் முன்னரங்குகளில் காணப்படுகின்றனர்,அனேகமாக பெண்களும் குழந்தைகளும் மாத்திரம் எல்லையை தாண்டி தப்பிச்செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணியின் வாழ்க்கை நீண்டகாலமாக பின்னிப்பிணைந்த ஒன்று.

உயர்நிலை பள்ளி நண்பர்களான அவர்கள் நகைச்சுவை குழு மற்றும்  தொலைக்காட்சி ஸ்டுடியோவில் ஒன்றாக பணிபுரிந்தனர்.

ஜனாதிபதி ஒரு நடிகர் அவருக்கு கதை எழுதுபவர் முதல்பெண்மணி.

மூன்று வருடங்களிற்கு முன்னர் அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டவேளை தான் விரும்பிய வாழ்க்கை இதுவல்ல என ஒலெனா தெரிவித்தார்.

பெப்ரவரி 24 ம் திகதி ரஸ்யாவின் ஏவுகணைகள் தலைநகரிற்கு மேலாக செல்ல ஆரம்பித்ததை தொடர்ந்து ஒலெனா 8 மாதங்களாக தனது பிள்ளைகளுடன் பல்வேறு பகுதிகளில் மறைந்து வாழ்ந்தார்.