“தலைவர்கள் பிறக்கிறார்கள்”

960 0

19ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்று அறிஞர் தாமஸ் கார்லைல், “தலைவர்கள் பிறக்கிறார்கள் உருவாக்கப்படுவதில்லை” என்று கூறுகிறார். அவரின் இந்த மேற்கோள் தமிழீழத்தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின்  பிறப்புக்கும் சாலவே பொருந்தி போனது.

தமிழினம் சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்தால் சுரண்டப்பட்டுக்கொண்டிருந்த வேளை 26 நவம்பர் 1954 திருவேங்கிடம் வேலுப்பிள்ளை, பார்வதியம்மாளுக்கு மனாக பிரபாகரன் அவர்கள்  பிறந்தார்.

ஆங்கில அறிஞர் ஹெர்பெட் ஸ்பென்ஸரோ, தாங்கள் வாழும் சமூகத்தின் வாயிலாகவே தலைவர்கள் உருவாகுகிறார்கள்” என்கிறார். உண்மை தான் தமிழீழத்தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் தன் சமூகத்தில் நடந்தவற்றை பார்த்து தன்னை தானே தலைவராக உருவாக்கிக் கொண்டார்.

தலைவர் அவர்கள் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் இவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின.

சிங்கள இனவெறியரால் ஈழத்தமிழர்கள், கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை இவர் கேள்விப்பட்டார். இவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த தலைவருக்கு கூறினார்.

பாணந்துறையில் இந்து குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற கொடூரமான வன்முறைகளை இவர் அறிந்தபோது, சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் இவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று இவர் முடிவு செய்தார்.

சீன ராணுவத்தில் பணியாற்றியவரும், எழுத்தாளருமான சுன் சூ , “அறநெறியை வகுத்து, அதை முறையாகக் கடைபிடிப்பவர்தான் தலைவர்” என்கிறார். தமிழீழத்தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களும் தனது தனிப்பட்ட வாழ்விலும் போராட்ட வாழ்விலும் அறநெறியை கடைப்பிடித்தார். யுத்த தர்மங்களுக்கு அமைவாக தனது போரியல் உத்திகளை கையாண்டு உலகமே வியக்கும் வண்ணம் மிகச்சிறந்த இராணுவத்தலைவனாக திகழ்ந்தார்.

கடந்த 1940களில் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், தலைவர்களை,

1. இலக்கை நோக்கிப் பணியாற்றுபவர்கள்

2.குழுவினருடன் இணைந்து பணியாற்றுபவர்கள்

3., உறவுநிலை சார்ந்தவர்கள்

என்று மூன்று வகைகளில் பிரிக்கின்றனர்.

இந்த மூன்று நிலையிலும் தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள் முத்தாய்ப்பாக விளங்குகின்றார்.

இலக்கை நோக்கிப் பணியாற்றுவர் என்ற வகையில் தமிழீழ இலட்சியத்தைக் நோக்கிய பயணத்தில் போராளிகளையும் மக்களையும் தலைமைதாங்கி அழைத்துச் சென்றார்.

குழுவினருடன் இணைந்து பணியாற்று என்ற வகையில் போராளிகளுடன் மட்டுமல்ல பல்வேறு அரசியல் இராணுவ குழுவினருடன் அரசியல் நீராட்டத்திற்கு அமைவாக பணியாற்றினார்.

உறவுநிலை சார்ந்தவர்என்ற வகையில் தமிழ் மக்களுக்கு தலைவனாக ஈழத்து பெற்றோருக்கு மகனாக, தன்னை விட மூத்தவர்களுக்கு தம்பியாக போராளிகளுக்கு பாசமிகு அண்ணணாக ஆதரவற்ற சிறுவர்களுக்கு அன்பு மிகு மாமாவாக மாதரசி மதிவதனிக்கு நல்ல இல்லாளனாக தனது குழந்தைகளுக்கு மிகச்சிறந்த தந்தையாக பல்வேறு உறவுநிலைகளில் உன்னதத்தை தொட்டு நின்றார்.

2000ஆம் ஆண்டில் எழுத்தாளரும் மனோதத்துவ நிபுணருமான டேனியல் கோல்மன் மேற்கொண்ட ஆராய்ச்சியில், தலைமைப் பண்பு பாணியை கட்டளை பிறப்பித்தல், தொலைநோக்கு, ஜனநாயகம், இணைத்தல், பணிகளைத் துரிதப்படுத்துதல், பயிற்சி ஆகிய 6 பகுதிகளாக பிரித்தனர்.இந்த ஆறு பகுதிகளிலும் தமிழீழத்தேசியத்தலைவர் பிரபாகரன் உச்சத்தை தொட்டு நின்றார்.

தலைமைத்துவம் என்பது இயற்கையே உருவாக்கிய ஒரு பதவி . தமிழீழத்தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களும் இயற்கையாக தலைமைத்துப் பண்புகளுடன் பிறந்தார்.

தலைவரின் வருகைக்காக எம் இனமே ஏங்கிக்கொண்டிருக்கிறது. ஹரோல்ட் ஜெனீன் கூறியது போல் “தலைமைத்துவத்தை உண்மையில் கற்பிக்க முடியாது. அதைக் கற்றுக்கொள்ள மட்டுமே முடியும். “எமது தமிழீழத்தேசியத்தலைவர் பிரபாகரனின் வாழ்வில் இருந்து தலைமைத்துவப் பண்புகளை எம் இளைய சந்ததியினர் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஜார்ஜ் வாஷிங்டன் கூறியது போல் “தலைமைத்துவம் என்பது தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருப்பது மட்டுமல்ல, உங்களை அங்கு அழைத்துச் செல்வதற்கான தைரியம், ஒழுக்கம் மற்றும் வளங்களைக் கொண்டிருப்பதுமாகும்“ எனவே, இளையோரை அழைத்துச்செல்ல வழிகாட்டிகள் காத்திருக்கிறார்கள்.

தமிழ்த்தேசிய இனத்தின் உயிராக, உணர்வாக, அறிவாக, ஆற்றலாக, முகமாக முகவரியாக விளங்குகிற எமது தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் 68 ஆவது பிறந்த நாள் வாழ்த்துகளை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும், அளப்பெரிய பெருமிதமும் அடைகிறோம்.