இராணுவத்தினர் நட்டஈடு செலுத்த வேண்டிய தேவை கிடையாது

130 0

அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் பொருளாதாரத்தை நெருக்கடிக்குக்குள்ளாக்கி நாட்டை வங்குரோத்து நிலை அடைய செய்துள்ளமைக்கு இராணுவத்தினர் நட்டஈடு செலுத்த வேண்டிய தேவை கிடையாது.

இராணுவத்தினர் நாட்டுக்கு எதிராக ஒருபோதும் செயற்படவில்லை. இராணுவத்தின் சேவை தரமற்றதாக அமையும் போது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகும்.

ஆகவே இராணுவத்தை கறுவேப்பிலை போல் நடத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ. 23) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு என்ற ரீதியில் தேசிய பாதுகாப்பிற்கும், எல்லைக்குட்பட்ட பாதுகாப்பு தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். நாட்டின் சுயாதீனத்தன்மை, ஆட்புல எல்லை, அரசியலமைப்பு மற்றும் நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பு இராணுவத்தினருக்கு உண்டு. நாட்டில் யுத்தம் இல்லை ஆகவே பாதுகாப்பு துறைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை கிடையாது என ஒருதரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

நாட்டில் யுத்தம் இல்லை என்பதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்காமல் இருக்க முடியாது. முன்னறிவிப்பு விடுத்ததன் பின்னர் நாட்டில் பாதிப்பு ஏற்படாது, ஆகவே  பாதுகாப்பு துறை எந்நிலையிலும் அவதானத்துடனும், முன்னேற்றகரமாகவும் காணப்பட வேண்டும். அனர்த்தம் ஒன்று நேர்ந்ததன் பின்னர் பாதுகாப்பு படையினரை பலப்படுத்த அவதானம் செலுத்த முடியாது.

யுத்தக் காலத்தில் 11 ஆயிரம் இராணுவத்தினர் இருந்தனர். விடுதலை புலிகள் அமைப்பு படை பலத்தில் முன்னேற்றமடைந்து செல்வதை கண்டு,இராணுவத்தை பலப்படுத்தினோம்.

விடுதலை புலிகளின் யுத்த உபகரணங்களை அறிந்ததன் பின்னரே இராணுவத்திற்கு பாதுகாப்பு உபரணங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வாறான நிலையில் தான் யுத்தம் 30 வருட காலம் நீண்டு சென்றது என்றார்.