அதிகம் தண்ணீர் குடித்ததால் புரூஸ் லீ இறந்திருக்கலாம் – 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வில் தகவல்

104 0

மறைந்த பிரபல நடிகரும், தற்காப்புக் கலையின் ஜாம்பவானுமான புரூஸ் லீ, அதிக அளவு தண்ணீர் குடித்ததால் இறந்திருக்கலாம் என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவானைச் சேர்ந்த புரூஸ் லீ 1950-ல் பிறந்தார். தற்காப்புக் கலைகளில் வல்லவரான இவர் ‘என்டர் தி டிராகன்’ உள்பட பல ஹாலிவுட் படங்களில் தற்காப்புக் கலையைப் போற்றும் விதத்தில் நடித்து புகழ்பெற்றார். 1973-ல் தனது 32-வது வயதில் அவர் பெருமூளை வீக்கம் காரணமாக இறந்தார். அப்போது, வலி நிவாரணி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் மூளையில் வீக்கம் ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் நம்பினர்.

அப்போது புரூஸ் லீயின் மரணத்துக்கு வேறு சில காரணங்களும் கூறப்பட்டன. சீனாவைச் சேர்ந்த நிழல் உலக தாதாக்களால் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், பொறாமை கொண்ட அவரது காதலி விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்றும் பல்வேறு வதந்திகள் பரவின.

ஆனால் புரூஸ் லீ மரணமடைந்து சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, அண்மையில் வெளியான புதிய ஆய்வு முடிவுகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

நடிகர் புரூஸ் லீ அதிக தண்ணீர் குடித்ததால் இறந்திருக்கலாம் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஸ்பெயினில் சிறுநீரக நிபுணர்கள் குழு நடத்திய இந்த ஆய்வு முடிவுகள் கிளினிக்கல் கிட்னி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. புரூஸ் லீயின் மரணத்துக்கு ஹைபோநட்ரீமியா காரணமாக இருந்திருக்கலாம். அதாவது சிறுநீரகங்கள் உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்ற முடியாமல் அவர் இறந்திருக்கலாம் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற அவரது சிறுநீரகங்கள் இயலாததால் புரூஸ் லீயின் மரணம் ஏற்பட்டது என்று அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.