இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர்இ தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்தித்தார்(காணொளி)

429 0

இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.

இச்சந்திப்பானது இன்று காலை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடி பிரச்சினைகளான, வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுப்பில் உள்ள மந்தகதி, காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில் வெளியுறவு செயலருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன் புதிய அரசியல் யாப்பு உருவாக்கமானது தற்போது ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான தனது சந்திப்பின் போது எடுத்துரைப்பதாக இந்திய வெளியுறவு செயலர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

இன்றைய சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்திய வெளியுறவு செயலாளரோடு, இலங்கைக்கான இந்திய தூதுவர், துணை செயலாளர், மற்றும் இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.