வரிச் சலுகைகள் மற்றும் மோசடிகளால் இழந்தவற்றை எமது அரசாங்கத்தில் மீள பெற்றுக்கொள்வோம்

93 0

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சிறந்த வேலைத்திட்டங்களை முன்வைத்திருக்கின்றபோதும் அதனை நடைமுறைப்படுத்த எந்த நடவடிக்கையும் அரசாங்கத்திடம் இல்லை. அதனால் வங்குராேத்து அடைந்திருக்கும் நாட்டை மீள கட்டியெழுப்ப எங்களால் முடியும்.

அதற்கான வேலைத்திட்டம் எம்மிடம் இருக்கின்றது. அத்துடன் கடந்த காலங்களில் வரிச் சலுகைகள் மற்றும் மோசடிகளால் இழந்த நிதிகளையும் வளங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் மீளப் பெற்று அவற்றை மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (21) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான ஆறாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வரவு செலவு திட்ட விவாவதம் ஆரம்பிக்கப்பட்டு ஒருவாரம் கடந்தும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கின்றது பாராளுமன்ற ஜனநாயகம் பெயரளவிலேயே இருக்கின்றது.

நிதி அனுமதித்துக்கொள்ளப்படும் பிரதான இடமாகவும் பெயரளவிலேயே இந்த பாராளுமன்றம் இருக்கின்றது.

நாட்டின் பிரதானிக்கு முக்குக் கொடுத்துக்கொண்டு அமைச்சரவையும் பாராளுமன்றத்தில் இருக்கும் சிலரும் இணைந்து பாராளுமன்றத்துக்கு தகவல்களை மறைத்துக்கொண்டு அரசியல் டீல் ஒன்றையே மேற்கொள்கின்றனர். நாட்டை பாரிய அழிவுக்கு கொண்டுசெல்லும் அரசியல் டீலே மேற்கொள்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமனத்துக்கு சமர்ப்பித்திருந்த இடைக்கால வரவு செலவு திட்டம் மற்றும் தற்போது சமர்ப்பித்திருக்கும் வரவு செலவு திட்டத்தில் உள்ள விடயங்களை பார்க்கும்போது நிதி முகாமைத்துவத்தில் பாரிய முரண்பாடுகளை காண்கின்றோம்.

புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பிரதான 3விடயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதாவது,  ஏற்றுமதியை அடிப்படையாகக்கொண்ட போட்டித்தன்மை மிக்க பொருளாதாரம், பசுமை புரட்சி பொருளாதாரம் மற்றது டிஜிட்டல் பொருளாதாரம். இந்த 3மூன்று விடயங்களும் மிகவும் நல்ல யோசனை.

ஆனால்  வரிக்கு மேல் வரி அதிகரிப்பு செய்து ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கு பதிலாக நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கி்னறது. அதேபோன்று எவ்வாறு செயற்படுத்துதென்ற வேலைத்திட்டம் எதுவும் இல்லை.

அதனால் நாட்டை சரியான பாதைக்கு இட்டுச்செல்ல  எம்மிடம் பல தீர்மானங்கள் இருக்கின்றன. அவற்றில் 6விடயங்களை முன்வைக்கின்றேன்.

வரவு செலவுத் திட்டத்தில் அநீதியான வகையில் வரித் திட்டங்கள் உள்ளன. வரிக் கொள்கை மிகவும் அநீதியானது.  நிறுத்திவைக்கப்பட்டுள்ள வரியை 5வீதத்தில் இருந்து 10வீதம் வரை அதிகரித்தால் அரச வருமானத்தை 90பில்லியன் வரை அதிகரித்துக்கொள்ள முடியும்.

ஆனால் அதனை செய்யாமல் அரசாங்கம் பெருமதி சேர் வரியை அதிகரித்துள்ளதால் கீழ் நிலையில் உள்ள மற்றும் வேலை செய்யும் மக்களுக்கே இதனால் பாதிப்புகள் உள்ளன.

வரிச் சலுகை விடயத்தில் பெரிய நிறுவனங்களுக்கு 50 ரூபாவுக்கு இருந்த வரியை 25 வீதம் வரையில் குறைத்தமை தொடர்பில் எந்தளவுக்கு அரச நிதியை இழக்க நேரிட்டுள்ளது.

இதனால் வரிச் சலுகைகளை வழங்க முன்னர் அது தொடர்பில் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆனால் சீனி வரிச் சலுகை மூலம் 48 பில்லியன் ரூபா நாட்டுக்கு கிடைக்காது போயுள்ளன.

இந்நிலையில் நிச்சயமாக மக்கள் அபிமானம் மிக்க எமது அரசாங்கத்தில் இந்த தவறை சரி செய்து, இல்லாது போன வரியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம்

இப்போதும் தொடரும் பாரிய மோசடிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக புகையிலை வரி மோசடியை குறிப்பிட வேண்டும்.

2019 இல் நல்லாட்சி அரசாங்க காலத்தில் இது தொடர்பில் சூத்திரமொன்று தயாரிக்கப்பட்டது. மொத்த தேசிய உற்பத்திக்கு நிகராக விகிதாசார அடிப்படையில் சிகரெட் வரி அதிகரிக்கப்பட வேண்டும்.

இதன்படி விலையில் 75 வீதமாக வரி இருக்க வேண்டும். இதனுடன் தொடர்புடைய நிறுவனங்களும் இதற்கு இணங்கியிருந்தனர். ஆனால் புகையிலை வரியை அறவிட சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் விரும்பவில்லை. இவர்கள் புகையிலை நிறுவனங்களின் பைகளிலேயே இருக்கின்றனர்.

இதனால் அரசாங்கத்தில் வரி வருமானம் குறைவடைந்துள்ள அதேவேளை புகையிலை நிறுவனத்தின் வருமானம் அதிகரித்துள்ளது.

சரியான வரி சூத்திரத்தை செயற்படுத்தினால் 63 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இன்னும் ஊழல் நிறைவுக்கு வரவில்லை. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நாங்கள் இந்த வரியை அறவிட்டு அரச வருமானத்தை அதிகரிப்போம்.

கடந்த காலங்களில் 5 கணக்காய்வு தடயவியல் அறிக்கைகள் மூலம் ஈபிஎப் கொள்ளை, பிணைமுறி மற்றும் பங்கு சந்தை மோசடிகள் தொடர்பில் கூறப்பட்டுள்ள போதும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அந்த மோசடிகள் நிறுத்தப்படவும் இல்லை. இப்போது சுகாதார காப்புறுதி என்று ஊழியர் நம்பிக்கை நிதிய பணத்தையும் கொள்ளையிட பார்க்கின்றனர்.

எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் குறித்த தடயவியல் கணக்காய்வு அறிக்கைகளில் உள்ள விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து மீண்டும் அந்த பணத்தை நாட்டு மக்களுக்கு கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.

இதேவேளை நிவாரணங்களை எடுத்துக்கொண்டால், அரசாங்கத்தினால் எந்தளவு நிவாரணத் திட்டங்களை செயற்படுத்தினாலும் 58 வீதமான ஏழைகளுக்கு அவை கிடைப்பதில்லை.

இதற்கு தீர்வு உள்ளது. மின்சார பாவனை அலகுகளை அடிப்படையாகக் கொண்டு நிவாரணம் பெற்றுக்கொள்ளக் கூடியவர்கள் தொடர்பில் தீர்மானிக்க முடியும். இதனை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். ஆனால் 2019இல் இருந்து வறுமை தொடர்பான புள்ளிவிபரங்களை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

நாடு வங்குரோத்தடைந்துள்ள நேரத்தில் நாங்கள் ஒரே வரையறைக்குள் இருந்து செயற்படக் கூடாது. அதனை தாண்டி போக வேண்டும்.

நாட்டில் யுத்தம் நடக்கின்ற போதும் கூட முடியாது என்று மக்களுக்கு தேவையானவற்றை வழங்காது இருக்கவில்லை. அதனால் வங்குராேத்து அடைந்திருக்கும் நாட்டை மீள கட்டியெழுப்பும் மாற்றுத்திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளது.

உலகில் போகக் கூடிய இடங்களுக்கு சென்று நாங்கள் இந்த நாட்டை கட்டியெழுப்புவோம். அதற்கான திறமையும் அர்ப்பணிப்பும் எமக்கு இருக்கின்றது என்றார்.