அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

253 0

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார்.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் விரைவில் வாக்காளர் பேரணி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. அவருக்கு எதிராக களம் கண்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் 11 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர், ரகசிய வாக்கெடுப்புதான் இருக்க வேண்டும் என சபாநாயகர் ப.தனபாலை வலியுறுத்தினார்கள். ஆனால், இறுதியில் வாக்கெடுப்பு வெளிப்படையாகவே அமைந்திருந்தது.

இந்தநிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். மாலை 3 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டத்தில், மதுசூதனன், மைத்ரேயன் எம்.பி., பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், செம்மலை, கே.பி.முனுசாமி, சண்முகநாதன், க.பாண்டியராஜன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரவு 7.15 மணி வரை இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பில் அடைந்த தோல்வி குறித்து மக்களிடம் உண்மை நிலையை விளக்க வாக்காளர் பேரணி நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்த 122 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொகுதியில் பேரணி மேற்கொண்டு மக்களின் ஆதரவை பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த வாக்காளர் பேரணியை என்று தொடங்குவது?, எங்கே தொடங்குவது? என்பது குறித்தும் பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில், ஓ.பன்னீர்செல்வத்தின் தமிழக சுற்றுப்பயண விவரம் வெளியாகும் என்றும் தெரிகிறது. இந்த நிலையில், நேற்று மாலை ஓ.பன்னீர்செல்வம் வீடு முன்பு அ.தி.மு.க.வில் உள்ள அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் குவிந்தனர். அப்போது, பல்லாவரம் நகராட்சி 5-வது வார்டு முன்னாள் உறுப்பினர் ஆனந்தகுமார், நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் வந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு சால்வை அணிவித்து தனது ஆதரவை தெரிவித்தார்.