மக்கள் விருப்பப்படி மறு தேர்தல் நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

263 0

ஜெயலலிதாவை நம்பி வாக்களித்த மக்களும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்படிபட்ட ஆட்சி தேவையா? இதற்கு கவர்னர் விடையளிக்க வேண்டும் என ஜி.கே. வாசன் கூறினார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் விழுப்புரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தாக்கப்பட்டது கண்டனத் துக்குரியது. இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சபையை கட்டுக்கோப்புடன் நடத்துவது சபாநாயகரின் கடமை. அங்கு தேவையற்ற நிகழ்வுகள் நடந்தது ஆளுங்கட்சியின் பலவீனம். சட்டசபையில் விரும்பத்தகாத, ஏற்றுக் கொள்ள முடியாத நிகழ்வுகள் நடந்துள்ளன.

தமிழக கவர்னர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்றாலும் யாரும் இல்லாத சட்டசபையில் அதிகாரபகிர்வின் காரணமாக நடந்த இந்த வாக்களிப்பு துரதிர்ஷ்டம்.

தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் நடந்து வரும் நிலையில் அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களும் கிடப்பில் உள்ளது. மக்கள் நம்பிக்கை பெறாத ஆட்சி இருக்கிற நேரத்தில் சபாநாயகர் செயல்பாடும் ஏற்புடையதாக இல்லை. இதனால் இந்த ஆட்சி எப்படி தொடரலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெயலலிதாவை நம்பி வாக்களித்த மக்களும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்படிபட்ட ஆட்சி தேவையா? இதற்கு கவர்னர் விடையளிக்க வேண்டும். ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வாக்கெடுப்பு சுதந்திரமாக நடைபெற கோரிக்கை வைத்த நிலையில் எம்.எல்.ஏ.க்களை 10 நாட்களாக அடைத்துவைத்து சட்டசபைக்கு அழைத்து வந்ததால் என்ன நடந்தது என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

10 நாட்களாக அடைத்து வைத்ததற்கான காரணம், எம்.எல்.ஏ.க்களிடம் நிலவும் அச்சம், கட்டுப்பாடு மற்றும் சபாநாயகரின் முடிவு ஆகியவற்றை பார்க்கும் போது பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே ஜனநாயகத்தை காக்க கவர்னர் நல்லமுடிவெடுக்க வேண்டும். மக்கள் கருத்து படி மறுதேர்தல் நடத்த வேண்டும்.

சபாநாயாகர் தாக்கப்பட்டதாகக்கூறுவதில் உண்மையில்லை. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அவரை சூழ்ந்து கொண்டு கோரிக்கை வைத்தார்களே தவிர அவரை தாக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது மாவட்டத்தலைவர் தசரதன், நகரத்தலைவர் அரிபாபு, பொருளாளர் சதீஷ்பாபு, நிர்வாகிகள் நத்தர்மொய்தீன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.