கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

119 0

 வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் சுமார் 40,500 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளதால், நீரை வடியவைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.

மேலும், தமிழகத்தில் இன்னும் 2 நாட்களில் பரவலாக கனமழை பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், அணைகள், நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இருப்பு, வரத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்குமாறும், உபரி நீரை வெளியேற்றும்போது மக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்குமாறும் முதல்வர் உத்தரவிட்டார்.

இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தலைமைச் செயலர் இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலர் பிரபாகர், டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதற்கிடையில், முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களின் இடைவிடாத உழைப்பு பாராட்டத்தக்கது. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.