சொத்து குவிப்பு வழக்கு நடத்தியதற்கு ரூ.10 கோடி தாருங்கள்: தமிழகத்திடம் கேட்கிறது கர்நாடகம்

251 0

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியதற்கு ஈடாக ரூ.10 கோடி தாருங்கள் என்று தமிழகத்திடம் கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றும்படி தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இவ்வழக்கில் சுப்ரமணியன் சாமியும் இணைந்து கொண்டார்.
அதன்படி 2003-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி இந்த வழக்கு கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டது. கர்நாடக அரசு சார்பில் புதிய நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டனர். அரசு வழக்கறிஞராக பி. வி. ஆச்சார்யா நியமிக்கப்பட்டார்.
சுமார் 10 வருடங்களுக்கு மேலாக இந்த வழக்கை கர்நாடக அரசு ஏற்று நடத்தி வந்தது. இந்த வழக்கில் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27, விசாரணை முடிந்து, ஜெயலலிதா குற்றவாளி என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு வழங்கினார்.
சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததோடு, ஜாமீன் கோரி விண்ணப்பித்தார். கர்நாடகா உயர் நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுவித்தது.இதனையடுத்து, சொத்துக்கள் குவித்தது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்தது. குன்ஹா வழங்கிய தீர்ப்பை நீதிபதிகள் உறுதி செய்தனர்.
இந்நிலையில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியதற்கு ஈடாக ரூ.10 கோடி தாருங்கள் என்று தமிழகத்திடம் கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு உள்ளிட்ட 4 வழக்குகளுக்காக ஈடு தொகையை தருமாறு தமிழக தலைமை செயலாளருக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதி இருந்தது. ஆனால் அதற்கு எந்த வொரு பதிலும் தமிழக அரசு தரப்பில் அனுப்பப்படவில்லை என்று கர்நாடக சட்ட மற்றும் பாராளுமன்ற நலத் துறை மந்திரி ஜெயசந்திரா தெரிவித்தார்.கடந்த 10 ஆண்டுகளுக்காக தன்னுடைய துறை மட்டும் ரூ.5 கோடிக்கு மேலாக செலவு செய்துள்ளதாக மந்திரி ஜெயசந்திரா குறிப்பிட்டுள்ளார்.