பெண் பயணிகள் பாதுகாப்பு, குழந்தைகள் மீட்பில் தீவிர நடவடிக்கை – சப்தமில்லாமல் சாதிக்கும் ரயில்வே பாதுகாப்பு படை

127 0

தெற்கு ரயில்வே சார்பில், இயக்கப்படும் ரயில்களில் பெண் பயணிகள் பாதுகாப்பு, ரயில் நிலையங்களில் குழந்தைகள் மீட்பு நடவடிக்கை ஆகியவை மூலமாக, ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எஃப்) சப்தமில்லாமல் சாதித்து வருகின்றனர்.

இந்திய ரயில்வே மற்றும் ரயில்வே அமைச்சக அதிகாரத்தின் கீழ் செயல்படும் ஓர் படையே ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) என்பதாகும்.

‘என் தோழி’ திட்டம்

தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு ரயில்களில் தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக, ‘மேரி சஹேலி’ எனப்படும் ‘என் தோழி’ அமைப்பு 2020-ல் தொடங்கப்பட்டது. சென்னை, திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்களில் ஆர்.பி.எஃப். பெண் அதிகாரிகள், காவலர்கள் அடங்கிய 17 குழுக்கள் உருவாக்கப்பட்டன.

பயணத்தின்போது, பெண்களுக்கு ஏதேனும் இடையூறு அல்லது ஆபத்து ஏற்பட்டால், உடனடியாக அவர்களுக்கு ரயில்வே பாதுகாப்புப்படையின் மூலமாக, உதவி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரயில் புறப்படும்இடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் 5 பெண்கள் கொண்ட ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் குழுக்கள் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அக்குழு, ரயில் புறப்படுவதற்கு முன்பாக, தனியாக பயணிக்கும் பெண்களின் தகவலைச் சேகரித்து, அவர்களிடம் நேரடியாக சென்று அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? எங்கு செல்கிறார்கள்? அவர்களின் முகவரி உள்ளிட்ட தகவல்களை பெற்றுக் கொள்வார்கள். பின்னர் பயணத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் ரயில்வே பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்ணை (139) வழங்குவார்கள்.

அந்த பெண் பயணி, சென்றுசேர வேண்டிய ரயில் நிலையம்வரை பாதுகாப்பாக பயணிக்கிறாரா என்பதை அக்குழுவினர்உறுதிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இந்தத் திட்டத்தில், 2021-ம் ஆண்டில் 3,579 பேரும், 2022-ம் ஆண்டில் தற்போது வரை 2,343 பேரும் பயனடைந்துள்ளனர்.

குழந்தைகள் மீட்பு

வறுமைச் சூழல், பெற்றோரிடம் சண்டை உள்ளிட்ட காரணங்களால், வீட்டை விட்டு வெளியேறி ரயில்நிலையங்களில் தவிக்கும் சிறார்களை, குழந்தைகள் உதவி மையத்துடன் இணைந்து ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் மீட்டு வருகின்றனர். அதன்படி, தெற்கு ரயில்வேயில் 2021-ம் ஆண்டில் 875 சிறுவர்கள், 159 சிறுமியர்கள் என்று 1,034பேரும், 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை 1,345 சிறுவர்கள், 237 சிறுமியர்கள் என்று 1,582 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை டிஐஜி ஒருவர் கூறியதாவது:

தெற்கு ரயில்வேயில் பெண் பயணிகள், குழந்தைகள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தனியாகப் பயணிக்கும் பெண் பயணிக்கு உதவ ‘என் தோழி’ திட்டம் தொடங்கி 2 ஆண்டு ஆகிறது, இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது, ‘மேரி சஹேலி’ என்ற பெயரில் செயலி அறிமுகப்படுத்தி உள்ளோம்.

ரயில் நிலையங்களில் தவிக்கும் சிறுவர், சிறுமியர்களை மீட்டு, குழந்தைகள் நல மையத்திடம் ஒப்படைத்து வருகிறோம். பயணிகள் பாதுகாப்புக்காக, அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மேலும், பயணிகள் பாதுகாப்புக்காக, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

கூடுதல் வீரர்கள் தேவை

சென்னை கோட்ட ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் குழு உறுப்பினர் நைனா மாசிலாமணி கூறும்போது, ‘‘ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, ஆர்பிஎஃப் வீரர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம், பயணிகள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த முடியும்’’ என்றார்.

ஆர்.பி.எஃப் உதயமான தினம்

ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) தொடங்கப்பட்ட தினம் செப். 20-ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. கடந்த 1872-ம் ஆண்டு ஜூலை 2-ல் செக்யூரிட்டி படையாக தொடங்கப்பட்டது. 1954 முதல் 1956 வரை ரயில்வே பாதுகாப்பு சேவை பிரிவாக இருந்தது. பின்னர் 1957-ம் ஆண்டு முதல் ரயில்வே பாதுகாப்புப் படையாக செயல்பட்டுவந்த நிலையில், கடந்த 1985-ம் ஆண்டு செப். 20-ல் துணை ராணுவப்படை அந்தஸ்துக்கு ரயில்வே பாதுகாப்புப் படை உயர்ந்தது.

இதன்பிறகு, இந்திய குடிமைப் பணி தேர்வு மூலமாக, நேரடியாக வரும் ஆர்பிஎஃப் அதிகாரிகளை இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை சேவை பிரிவு அதிகாரிகளாக அந்தஸ்து உயர்த்தி 2019-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

இந்திய ரயில்வேயில் கடந்த ஓர் ஆண்டில், 1 லட்சத்து 15 ஆயிரம் புகார்களுக்கு ஆர்பிஎஃப் தீர்வு கண்டுள்ளது. மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றோரிடமும், அரசின் குழந்தைகள் காப்பகங்களிலும் சேர்த்துள்ளது. 7 ஆயிரம் ரயில்வே திருட்டுகளை தவிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.