உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனம் : சட்டநடவடிக்கை எடுக்கப்படும்

148 0

கொழும்பின் பல முக்கிய இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டிருக்கும் உத்தரவு தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், 1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின் 2 ஆவது பிரிவு பரந்தளவிலான பொது இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்துவதற்கான அதிகாரத்தைப் பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்கவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கின்றது.

அதுமாத்திரமன்றி ‘ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவின் பிரிவுகள் தொடர்பில் நாம் உன்னிப்பாக ஆராய்ந்துவருவதுடன் அதற்கமைய மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவசியமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்’ என்றும் சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின்கீழ் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் கொழும்பிலுள்ள சில பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேற்குறிப்பிட்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான அறிவிப்பில் கொழும்பில் மக்களால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இடங்கள் உள்ளடங்கலாக கொழும்பு மாவட்டத்திலுள்ள பல இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஹல்ஃ;ப் ஸ்டொப் பகுதியிலுள்ள நீதிமன்ற வளாகப்பகுதியும் அவ்வறிவிப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது.

மேலும் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள வீதிகளிலோ, மைதானங்களிலோ அல்லது திறந்தவெளிகளிலோ மக்கள் ஒன்றுகூடுவது தடுக்கப்பட்டிருப்பதுடன் மாறாக ஒன்றுகூடுவதெனின் அதற்கு பொலிஸ்மா அதிபர் அல்லது சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபரின் அனுமதி பெறப்படவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி அவ்வலயங்களில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் அனுமதி வழங்கப்படாத வாகனங்களை நிறுத்திவைப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் 1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின் 2 ஆவது பிரிவானது எந்தவொரு காணியையோ, கட்டடத்தையோ, கப்பலையோ அல்லது விமானத்தையோ தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பதற்கான அதிகாரத்தையே பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்குகின்றதே தவிர, விரிவான பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்துவதற்கான அதிகாரத்தை வழங்கவில்லை.

மேற்படி சட்டத்தின் 2 ஆம் பிரிவின்கீழ் உத்தரவொன்றைப் பிறப்பிப்பதன் பிரதான நோக்கம் யாதெனில் இலங்கையின் பாதுகாப்புடன் தொடர்புடைய தகவல்களையும் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படக்கூடிய நிறுவனங்கள், கட்டமைப்புக்களின் தகவல்களையும் பாதுகாப்பதேயாகும். எனவே 2 ஆம் பிரிவின்கீழ் பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவையும் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தமுடியாது.

ஆனால் தற்போது ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவில், அவ்வுத்தரவின்கீழ் இழைக்கப்படும் குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்படும் எந்தவொரு நபருக்கும் மேல்நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரமே பிணை வழங்கப்படமுடியும் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமை தீவிர கரிசனையைத் தோற்றுவித்துள்ளது. உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவில் அத்தகைய சரத்துக்கள் எவையும் உள்ளடங்கவில்லை என்பதுடன் மாறாக அச்சட்டத்தின் 22 ஆம் பிரிவு சந்தேகநபரை பிணையில் விடுவிப்பதற்கு நீதிவானுக்கு அதிகாரமளித்துள்ளது. எனவே ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவின் பிரிவுகள் தொடர்பில் நாம் உன்னிப்பாக ஆராய்ந்துவருவதுடன் அதற்கமைய மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவசியமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.