மன்னார் சுவாமித் தோட்ட காணிகளை விடுவிக்க சம்மதம்

19 0

அடர்ந்த காடுகளுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில், வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களினால் அடையாளப்படுத்தப்பட்ட காணிகளில் விவசாயம் மற்றும் நீர்வேளாண்மை உற்பத்திகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவார காலத்தில் அவை தொடர்பான நடவடிக்கைகளை பூர்த்தி செய்யுமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 

அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் தலைமையில் இன்று(22) நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,

குறித்த திணைக்களங்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகள் மற்றும் யுத்தத்திற்கு முன்னர் மக்கள் பயன்படுத்திய காணிகள் போன்றவை தொடர்பாக  விரிவாக ஆராயப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களினால் வடக்கு மாகாணத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுள், விவசாயம் மற்றும் நீர்வேளாண்மை எனப்படும் நீரியல் உயிரின வளர்ப்பு உற்பத்திகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான இடங்களை விடுவித்து, உற்பத்திகளை மேற்கொள்வதற்கு பிரதேச மக்களிடம் கையளிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கான துறைசார் அமைச்சர்கள் உள்ளிட்ட உயர்மட்டக் கலந்துரையாடல், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய, வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சில்  இன்று இடம்பெற்றது.

இதன்போது, பல்வேறு விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், மேற்குறிப்பிட்ட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோன்று, மன்னார் சுவாமித் தோட்டம் கிராமத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாக தேவாலயத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், தேசிய பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு அமைய,  அண்மையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தட்ட காணிகளை மீள் அளிப்பதற்கும்  குறித்த திணைக்களம் சம்மதித்துள்ளது.

அண்மையில் மன்னாருக்கான விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த சம்மந்தப்பட்ட தேவாலயத் தரப்பினர், மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்ட குறித்த காணிகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

இந்நிலையில், சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் இடம்பெற்ற இன்றைய சந்திப்பின்போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இவ்விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், சுவாமித் தோட்டக் காணிகளை மீள் அளிப்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில், துறைசார் அமைச்சுக்களின் அதிகாரிகளும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின்   அதிகாரிகளும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானும் கலந்து கொண்டிருந்தார்.