தினேஸ் பிரதமராக பதவி வகிக்கும் போது எங்களுக்கு ஏற்பட்டுள்ளமை எந்தளவு அநீதியானது!

98 0

நல்லாட்சி அரசாங்கத்தின்  காலத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக செயற்பட்ட போது தினேஸ் குணவர்தன தலைமையிலான குழுவினருக்கு ஏற்பட்ட நிலைமையை தற்போது அவர் பிரதமராக பதவி வகிக்கும் போது எங்களுக்கு ஏற்பட்டுள்ளமை எந்தளவு அநீதியானது என அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி தரப்பில் சுயாதீனமாக செயற்படும் டலஸ் அணியின் 13 உறுப்பினர்களுக்கு  சபையில் உரையாற்றுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக சபையில் இன்று (22) வியாழக்கிழமை எழுந்த சர்ச்சையை தொடர்ந்து

உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்கூறுகையில்

அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 13 உறுப்பினர்களின் உரிமை திட்டமிட்ட வகையில் மிறப்படுகிறது.

இதேபோன்ற நிலைமை 2015 நல்லாட்சி காலத்தில் ஏற்பட்டது. அப்போது நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் போட்டியிட்டோம்.

இந்நிலையில் கூட்டணியில் குழுவொன்று கூட்டணி அரசாங்கத்துடன் இணைந்துகொண்டது. அப்போது தற்போதைய பிரதமர் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட 55 பேர் கொண்ட குழு அரசாங்கத்தில் இணையாது எதிர்க்கட்சியில் அமர்ந்தது. அப்போது நான் ஆளும் கட்சியில் இருந்தேன். அன்று  அந்த 55 பேருக்கும் பேசுவதற்கு உரிமை மறுக்கப்பட்டது.

இவ்வேளையில் சபாநாயகர் தீர்மானமொன்றை எடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு கிடைக்கும் நேரத்தில் எதிர்க்கட்சியில் உள்ள 55 பேருக்கும் ஒதுக்குமாறு குறிப்பிட்டார்.

அன்று 55 பேர் கொண்ட பாராளுமன்ற குழுவின் தலைவராக தற்போதைய பிரதமரே இருந்தார். பேச்சு சுதந்திரம் கேட்டு இங்கு அமர்ந்திருந்தனர். அன்று உங்களுக்கு நடந்தது இன்று எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அன்று தினேஸ் குணவர்தனவுக்கு நடந்தவற்றை அவர் பிரதமராக இருந்துகொண்டு எங்களுக்கு செய்கின்றார். இது எந்தளவு அநீதியானது என்றார்.