பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது!

88 0

பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் 12 (1) ஆவது பிரிவுக்கு முற்றிலும் முரணானது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில்  அறிவித்தார்.

பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் வியாழக்கிழமை (22) காலை 9.30 மணிக்கு கூடியதையடுத்தே  சபாநாயகர் இதனை  அறிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு தொடர்பில் சபாநாயகர் மேலும் கூறுகையில்,

பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வியாக்கியானத்தை உயர் நீதிமன்றம் எனக்கு அனுப்பியுள்ளது.

இதற்கமைய பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் 12(1) ஆவது பிரிவுக்கு முற்றிலும் முரணானது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சிபாரிசுக்கு ஏற்றவாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் முரண்பாடுகள் நீக்கப்படும் எனவும் உயர்  நீதிமன்றம் அறிவித்துள்ளது என்றார்.

பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.

பொருளாதாரத்தில் குறிப்பிட்ட துறைகள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை தனித்தனியாக இறக்குமதி செய்து பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பெற்றோலியப் பொருட்கள் விஷேட ஏற்பாடுகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, பெற்றோலிய இறக்குமதிக்கு முறையாக அடையாளம் காணப்பட்ட துறைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படவிருந்தது.

இந்நிலையிலேயே பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் 12(1) ஆவது பிரிவுக்கு முற்றிலும் முரணானது என்று உயர்  நீதிமன்றம் பாராளுமன்றத்தில்   சமர்ப்பிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தில் உச்ச  நீதிமன்றம் கூறியுள்ள அரசியலமைப்புக்கு முரணான சரத்துக்கள் மற்றும் பகுதிகள் திருத்தப்பட்டு உடனடியாக சமர்ப்பிக்கப்படும் என வலுசகதி  மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.