தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தி.மு.க. யாரையும் ஆதரிக்கவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன், கவிஞர் கனிமொழி எம்.பி., முன்னாள் மத்தியமந்திரி ஜெகத்ரட்சகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில், தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை, உள்ளாட்சி தேர்தல், தமிழக வறட்சி நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பிறகு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழகத்தில் நீட் தேர்வு, விவசாயிகள் தற்கொலை, வறட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகிறது. ஆனால் அதை பற்றியெல்லாம் அ.தி.மு.க. அரசுக்கு கவலையில்லை. பதவி சண்டை தான் நடக்கிறது. அ.தி.மு.க. இப்போது சசிகலா அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் அணியாக 2 ஆக உள்ளது. தான் முதல்-அமைச்சராக இருக்க வேண்டும் என்று கூவத்தூருக்கும், கீரின்வேஸ் சாலைக்கும் இடையே பெரிய போராட்டமே நடக்கிறது. இவர்களுக்குள் யார் வந்தாலும் மீதி இருக்கும் 4 ஆண்டுகளுக்கு கொள்ளையடிக்க தான் பார்ப்பார்கள்.
தமிழகத்தில் நடக்கும் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நிலையான ஆட்சி அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபையை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதத்திற்கு பின்னால் பா.ஜ.க. இருக்கிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது. ஆளுங்கட்சி தனது பலத்தை நிரூபிக்க வேண்டும். எங்களை பொறுத்தவரையில் யாரையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும்போது, தி.மு.க.வின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்.
சசிகலா போன்றவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி என்னுடைய நேரத்தையும், தரத்தையும் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. அவரை போல் யாராவது எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைப்பார்களா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

