மாதவரத்தில் மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி: அக்டோபர் 2 – வது வாரத்தில் தொடங்க திட்டம்

111 0

 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம்-சிறுசேரி இடையே 3-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணியை அக்டோபர் 2-வது வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டம் 3 வழித்தடங்களில் ரூ.63,246கோடி செலவில் நடைபெறுகிறது.இதில் 42.6 கிமீ தொலைவுக்குச்சுரங்கப்பாதை அமைய உள்ளது.

இந்தப் பணிகளை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப் பாதைக்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

23 சுரங்க இயந்திரங்கள்: உயர்மட்ட பாதையை விடச் சுரங்கப்பாதைப் பணி அதிக சவாலாக இருக்கும் என்பதால், அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சுரங்கப் பாதைப் பணிக்காக, மொத்தம் 23 சுரங்கம் துளையிடும் இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, சீனாவிலிருந்து மாதவரத்துக்கு முதல் சுரங்கம் துளையிடும் இயந்திரம் கடந்த ஜூன் மாத இறுதியிலும், 2-வது சுரங்கம் துளையிடும் இயந்திரம் பசுமை வழிச்சாலைக்கு ஆகஸ்ட் மாதத்திலும் வந்தடைந்தன. இதுதவிர, திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சுரங்கம் துளையிடும் இயந்திரத்தின் பாகங்களை ஒருங்கிணைத்து, சோதிக்கும் பணி நடைபெறுகிறது.

இதுதவிர, 2 சுரங்கம் துளையிடும் இயந்திரங்களின் பாகங்கள் சீனாவிலிருந்து சென்னைக்கு அண்மையில் வந்தன. இவற்றை வெவ்வேறு இடங்களில் வைத்து, ஒருங்கிணைக்கும் பணி நடைபெறுகிறது.

மாதவரம்-சிறுசேரி சிப்காட்: இந்நிலையில், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை அருகில் சுரங்கம் தோண்டும் பணி அக்டோபர் 2-வது வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம் பால்பண்ணை முதல்தரமணி வரையிலான 21 கிமீ தொலைவுக்கு 2 சுரங்கப்பாதைக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. தற்போது, சுரங்கம் தோண்டுவதற்கு முன்பான, ஆரம்பக்கட்ட பணி, சுவர்கட்டும் பணி நடந்து வருகிறது.

சீனா, புனே உட்பட 4 இடங்களில் 15 சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களின் தயாரிப்பு நடைபெற்று வருகின்றன. முதல் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரத்தின் பணி அக்டோபர் 2-வது வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.