பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை கிடையாது!

90 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஏகமனதான தீர்மானத்திற்கமையவே தினேஷ் குணவர்தன பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏதும் கிடையாது.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரசியலுக்கு மீண்டும் பிரவேசிக்க இணக்கம் தெரிவித்தால் அதனை வரவேற்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடாக பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2023ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் முன்னர் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த பொதுஜன பெரமுன அவதானம் செலுத்தியுள்ளதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரான தினேஷ் குணவர்தன பாராளுமன்ற கோட்பாடுகளுக்கு அமையவும்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஏகமனதான தீர்மானத்திற்கமையவே இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முறையான திட்டங்கள் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன.

எரிபொருள்,எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவை விநியோகம் சீராக முன்னெடுக்கப்படுகிறது.அரசியல் நெருக்கடிக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைவதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவிக்காத காரணத்தினால் பொதுஜன பெரமுனவை பிரதானமாக கொண்டு இராஜாங்க அமைச்சுக்கள் நியமிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்க இணக்கம் தெரிவித்தால் அதனை வரவேற்போம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு மக்களாதரவு உண்டு.எதிர்வரும் காலங்களில் எத்தேர்தல் இடம் பெற்றாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம் என்றார்.