ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் ?

87 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய உயர்மட்ட பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. தற்போதுள்ள அரசாங்கத்தில் எவ்வித அமைச்சுப்பதவிகளையும் ஏற்காமல், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்குவது என மத்திய குழு எடுத்த தீர்மானத்திற்கு முரணாக 8 பேர் அமைச்சுப்பதவிகளையும் , இராஜாங்க அமைச்சுப் பதவிகளையும் ஏற்றுள்ளனர்.

இவ்வாறு கட்சியின் மத்திய குழு தீர்மானங்களுக்கு முரணாக செயற்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரத்தை கட்சி தலைவருக்கு உரித்தாக்கும் வகையில் அண்மையில் சு.க.வின் யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு , அவை நிறைவேற்றப்பட்டன.

அதற்கமைய அமைச்சுப்பதவிகளையும் இராஜாங்க அமைச்சு பதவிகளையும் ஏற்றுள்ளவர்களை கட்சியிலிருந்து நீக்கும் அதே வேளை , இடைவெளி ஏற்படும் பதவிகளுக்கு புதிய நியமனங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாசவிடம் வினவிய போது ,

இவ்வாரமும் சுமார் 12 அமைச்சரவை அமைச்சு பதவிகளை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதன் பின்னரே உண்மையில் யார் கட்சியுடன் நிலைத்திருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

எனவே புதிய அமைச்சுக்கள் வழங்கப்பட்டதன் பின்னரே சுதந்திர கட்சியின் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களாகவும் , இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள லசந்த அழகியவண்ண பொருலாளராகவும் , சுரேன் ராகவன் மற்றும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி ஆகியோரும் வேறு முக்கிய பதவிகளையும் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த பொதுத் தேர்தலில் சுதந்திர கட்சியின் ஊடாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான 14 பேரில் , மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, ஷாந்த பண்டார, சுரேன் ராகவன், லசந்த அழகியவண்ண, ரஞ்சித் சியம்பலாப்பிட்டி, ஜகத் புஷ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க ஆகிய 8 உறுப்பினர்களும் தற்போது அரசாங்கத்தில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.