தியாகி லெப் கேணல் திலீபனின் தியாகப்பயணம் – நான்காம் நாள்!

226 0

651வது ஆளாகி மலரப்போகும் தமிழீழத்தை மேலிருந்து பார்ப்பேன்..! கொள்கைக்காக என்னைத் தொடர்ந்து வருபவர்களையும் தடுக்காதீர்கள்..!! மக்கள் புரட்சி வெடிக்கட்டடும்!!!

மூன்றாம் நாள் இரவு நன்றாகத் தூங்கிய திலீபன் அண்ணா இன்றைய நாள் நாலாம் நாளில் வழமை போன்று எழுந்திருக்க தாமதமாகியது. இரண்டு இளைஞர்கள் திலீபன் அண்ணாவின் தலைமாட்டில் நின்று மாறி மாறி காற்று விசுக்கிக் கொண்டு இருந்தார்கள்.

நன்றாக விடிந்தபின்னர் திலீபன் அண்ணாவின் உடல்நிலை பரிசோதிக்கப்படுகிறது. நாடித்துடிப்பு -120 சுவாசத்துடிப்பு – 24 என்று அசாதாரன அளவீட்டை காட்டியது. நான்காவது நாளாக தொடர்ந்து தண்ணி குடிக்காமல் இருந்ததால் இந்த அசாதாரண நிலையினை திலீபன் அண்ணாவின் உடல் அடைந்திருந்தது.

உதடுகள் உலர்ந்துபோய் பாளம் பாளமாக வெடித்து காணப்பட்டதுடன் காண்கள் குழிவிழுந்து கன்னங்கள் ஒட்டி பார்ப்பதற்கே அலங்கோலமான நிலையில் திலீபன் அண்ணாவின் முகம் காணப்பட்டிருக்கையில் அவரிற்கு ஒத்தாசையாக இருந்த வாஞ்சி அண்ணாவும் நாலாவது நாளாக உணவு தண்ணி எதுவும் இன்றி இருந்தது அங்கிருந்தவர்கள் மூலம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களிற் தெரியவந்ததையடுத்து வாஞ்சியண்ணாவிற்கு அழைப்பு வந்தது.

தலைவர் அழைத்துவிட்டார் என்ன நடக்கப்போகின்றது என்ற பதற்றத்துடன் சென்றவரை “இருங்க வாஞ்சி அண்ணா” என்ற அன்பான குரல் அழைத்தது. “நீங்கள் படிச்சவர். வயதில் மூத்தவர். நான் சொல்ல வேண்டியதில்லை. திலீபனில் அன்பு இருக்க Nவுண்டியதுதான். அதற்காக இப்படியா சொல்லாமல் கொள்ளமால் எதுவும் குடிக்காமல் சாப்பிடாமல் இருப்பது? நீங்கள் அவரைப் பார்க்க வேண்டியவர்.

உங்கள் உடம்பில் சக்தி இருந்தால்தான் அதற்கு உங்களால் முடியும்.

நான் திலீபனில் அன்பில்லாதவன் என்றா நினைத்திருக்கிறீர்கள்? திலீபன் என் பிள்ளையைப் போன்றவன். நானே அவனை இந்தப் உண்ணாவிரத்ப் போராட்டத்திற்கு அனுமதித்திருக்கின்றேன் என்றால் என் மனதைக் கல்லாக்கித்தான் அதைச் செய்திருக்கிறேன். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தேவையான மனோதிடம் திலீபனிடம் இருப்பதால்தான் உண்ணாவிரதத்தை அவன் நடாத்த விரும்பியபோது நான் அதற்குச் சம்மதித்தேன்.

ஒவ்வொருவராக இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதுதான் நல்லது. திலீபனுக்கு அடுத்த சந்தர்ப்பம் உங்களிற்கு தர முயற்சிக்கின்றேன். அது மட்டும் நீங்கள் வழக்கம் போல் சாப்பிட்டு குடித்து இருக்க வேண்டும். திலீபனை வடிவாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது எதையாவது குடித்து உங்கள் பிடிவாதத்தை விட்டுவிடுங்கள்.

என்று கூறிய தலைவர் சொர்ணம் அண்ணாவை அழைத்து குளுக்கோசும் எலும்பிச்சம் பழத்தையும் வரவழைத்து தானே தன் கைப்படக் கரைத்துக் கொடுத்ததை தவிர்க்க முடியாமல் வாஞ்சி அண்ணா குடித்து தனது அறிவிக்கப்படாத உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார். கண்டிப்புடைய தலைவரை பார்த்த வாஞ்சி அண்ணா அன்பு காட்டிய தலைவரை முதல்தடவையாக பார்த்து நெகிழ்துபோனதாக குறிப்பிட்டிருந்தார்.

திலீபன் அண்ணாவின் இலட்சியப் பயணம் பற்றிய செய்தி தமிழர்கள் பரவிவாழ்ந்து வரும் ஐரோப்பிய நாடுகள் அரபு நாடுகள் தமிழகம் எங்கும் தீயாய் பரவியிருந்தது. அங்கிருந்தெல்லாம் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன்.

வாடிவதங்கிப் போயிருந்த திலீபன் அண்ணா மக்களிடம் பேசவிரும்பினார்.

“அன்பார்ந்த தமிழீழ மக்களே! விளக்கு அணையுமுன்னர் பிரகாசமாக எரியுமாம். அதுபோல இன்று நானும் உற்சாகத்துடன் இருக்கின்றேன் என்பது தெரிகிறது. இன்று தாராளமாகப் பேச முடிகிறது. போராடத் தயாராகுங்கள்! எனக்கு விடை தாருங்கள்! ஒருவரும் என்னை இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்க வேண்டாம். நானும் எனது தலைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது. மறைந்த போராளிகள் 650 பேருடன் சேர்ந்து 651வது ஆளாகி மேலிருந்து பார்ப்பேன். எங்கள் உயிர் உங்களுடன் ஒட்டிவிடும். என்னைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். எனது அவயவங்கள் செயலிழப்பதனால் இனிமேல் என்னால் மனிதனாக வாழமுடியாது என்பது எனக்குத் தெரியும். எமது வீரர்கள் என்னைத் தொடர்ந்து வருவார்கள் அவர்களையும் தடுக்காதீர்கள். நாங்கள் ஐந்து ஆறு பேர் சாவதால் எவ்வித தீங்கும் வந்துவிடாது. மக்கள் புரட்சி வெடிக்கட்டும். நான் மூன்று தடைவ பேசியுள்ளேன்.

மூன்று தடவைகளும் ஒரே கருத்தைதான் பேசியுள்ளேன்.”

அவயவங்கள் செயலிழந்து உயிர்வாழ்தலிற்கு இனி வாய்பில்லை என்று தெரிந்த போதும் கொண்ட கொள்கையில் உறுதியுடன் தியாகப்பயணத்தை தொடர்ந்த திலிPபன் அண்ணாவிற்கு ஆதரவு தெரிவித்து தமிழீழத் தாயகமெங்கும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டங்களும் அடையாள உண்ணாவிரதப் போராட்;டங்களும் நடாத்தப்பட்டுவந்தன.

இதனைவிட யாழ் கோட்டை முன்பாகவும் அரச அலுவலகங்கள் முன்பாகவும் மக்கள் திரளாகக் திரண்டு மறியல் போராட்டங்களை மேற்கொண்டவண்ணமிருந்தனர். இதனால் தமிழீழம் எங்கும் பதற்றத்துடனும் எழுச்சியுடனும் காணப்பட்டது. நேரம் செல்லச்செல்ல நல்லூர் வீதியில் கூடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. இரவ திலீபன் அண்ணா உறங்கிய பின்னர் அவரிற்கு தெரியமல் கணிக்கப்பட்ட உடல் நிலை குறிப்புக்கள் இப்படிக் கூறின.

இரத்த அழுத்தம் -100-65

நாடித்துடிப்பு – 114

சுவாசத்துடிப்பு – 25

தியாகப் பயணம் தொடரும்…