அரசாங்கத்தின் செயற்பாட்டால் நெருக்கடியில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை

118 0

பயங்கரவாதத்தடை சட்டம் மற்றும் அவசரகால நிலைமை என்பவற்றை பயன்படுத்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அரசியல் அடக்குமுறைகளை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தின் இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளினால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை தொடர்பில் மீண்டும் நெருக்கடிகள் ஆரம்பமாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 21 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரசியல் அடக்குமுறைகளுக்கான இன்று நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் , அவசரகால நிலைமையும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் அவசரகால நிலைமை நீக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அறிவித்திருந்த போதிலும் , இது வரையில் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியுடனான சந்திப்பின் போதும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசர கால நிலைமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

ஆனால் இன்று தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்குவதற்கும் , தொழிற்சங்க தலைவர்களைக் கைது செய்வதற்கும் அவர் இவ்விரண்டையுமே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். அனைவருக்கும் வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாகவே ஜனாதிபதி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் ஒறுங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறு அவர்களை இதன் கீழ் கைது செய்ய முடியும் என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகளால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிசலுகை தொடர்பில் மீண்டும் நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகள் மிகத் தவறானவை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே அவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும்.

பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு இயலுமை இல்லை. எனவே இந்த அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளது. ஜனாதிபதியும் தோல்வியடைந்துள்ளார் என்றார்.