வெள்ளவத்தை கடலில் மிதந்த ஆணின் சடலம் – பின்னணி குறித்து சிறப்பு விசாரணைகள் ஆரம்பம்

101 0

வெள்ளவத்தை கடற்கரையோரமாக அமைந்துள்ள கடற்படை காவலரணுக்கு அப்பால், கடலில் மிதந்துகொண்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெள்ளவத்தை பொலிஸார் ஊடாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கடந்த 26 ஆம் திகதி, குறித்த சடலம் மீட்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், உடலில் சந்தேகத்துக்கு இடமான ஒரு அடையாளம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் சடலத்தில் ஆடைகள் எதுவும் இருக்காத நிலையில் கீழ் உள்ளாடை மட்டும் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

சுமார் 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறும் பொலிஸார், சடலத்தை அடையாளம் காண, களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைத்துள்ளனர்.

சடலத்தின் கையில், கைக்கடிகாரம் ஒன்று இருந்ததாக குறிப்பிட்ட பொலிஸார், சடலத்தை கல்கிசை நீதிவான் பார்வை இட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டதாக கூறினர்.

எனினும் இன்று ( 28) மாலையாகும் போதும் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், பிரேத பரிசோதனைகள் நடாத்தப்பட்டிருக்கவில்லை. வெள்ளவத்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்