ரணிலுக்கு ஆதரவு வழங்குவது சாகரவின் தீர்மானம் அது பொதுஜன பெரமுனவின் தீர்மானமல்ல – பிரேம்நாத் தொலவத்தே

140 0

புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுசெயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளமை அவரது தனிபட்பட்ட தீர்மானமே தவிர, கட்சியின உத்தியோகப்பூர்வ தீர்மானமல்ல என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்தே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

புதன்கிழமை (20) இடம்பெறவுள்ள புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முழுமையான ஆதரவு வழங்குவார்கள் என்றும், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டலஸ் அழகபெருமவிற்கு ஆதரவு வழங்க போவதில்லை எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அதிருப்தி தெரிவித்துள்ளமையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதாக பொதுசெயலாளர் சாகர குறிப்பிட்டுள்ளமை அவரது தனிப்பட்ட தீர்மானமே தவிர கட்சியின் உத்தியோகப்பூர்வமான தீர்மானமல்ல என்பதை தெளிவாகக் குறிப்பிடுகின்றேன்.

பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரான டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவு வழங்குவது சிறந்த தீர்மானமாக அமையும் என்பதை கட்சியின் பெரும்பலான உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

டலஸ் அழகபெருமவிற்கு ஆதரவு வழங்குவது குறித்து பல்வேறு மட்டத்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் பொதுசெயலாளர் சாகர காரியவசத்தின் முரண்பாடான கருத்துக்கள் கட்சியின் பலவீனத்திற்கும், பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும் பிரதான காரணியாக அமைந்தது. இவரது செயற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கட்சியின் உயர்மட்டத்திற்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.