சுவாதி கொலையாளி ராம்குமாரிடம் போலீசார் விசாரணை

391 0

201607141106150125_swathi-murder-case-police-investigation-Ramkumar_SECVPFசென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி, கடந்த மாதம் 24-ந்தேதி கொலை செய்யப்பட்டார்.
நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்து பயணிகள் மத்தியிலேயே அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர், சுவாதியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். சுவாதி மீதான ஒருதலை காதலில், அவருடன் பழக முடியாத ஏக்கத்தில் ராம்குமார் இச்செயலில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் பிடியில் சிக்கிய போது கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்ற ராம்குமார், சிகிச்சைக்கு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட போது ராம்குமார் கழுத்தை அறுத்துக் கொண்டதால் போலீசாரால் அவரிடம் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை.

இதனை தொடர்ந்து ராம்குமாரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி, எழும்பூர் கோர்ட்டில் போலீசார் மனு செய்தனர். ஆனால் 3 நாட்கள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலையில் போலீசார் ராம்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

சுவாதி கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான நுங்கம்பாக்கம் உதவி கமி ஷனர் தேவராஜ், ராம்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

சுவாதியுடன் அறிமுகம் ஏற்பட்டது எப்படி? கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது எப்படி? என்பது போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீசாரின் விசாரணைக்கு ராம்குமார் உரிய ஒத்துழைப்பு அளித்து வருவதாக கூறப்படுகிறது.

சுவாதி கொலை செய்யப்பட்ட நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் மற்றும் ராம்குமார் தங்கி இருந்த மேன்சன் ஆகிய இடங்களுக்கு போலீசார் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்துகிறார்கள். சுவாதி கொலை தொடர்பாக ராம்குமார் அளிக்கும் தகவல்களை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்கிறார்கள். இதனை இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக சேர்க்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை ராம்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று 2-வது நாளாகவும் அவரிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் பல்வேறு தகவல்களை கூறியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை நாளை வரை நடத்தப்படுகிறது. 3 நாள் காவல் நாளையுடன் முடிவடைவதால், ராம்குமாரை நாளை மாலை 5 மணி அளவில் எழும்பூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்.