புதிய கட்சி உருவாக்குவது குறித்து மஹிந்த, பசில்

340 0

download (8)புதிய கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரான முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச ஆகியோரது தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் கொழும்பு ராஜகிரியவிலுள்ள மஹிந்த ராஜபக்சவின் மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை பகல் நடைபெற்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் எதிர்வரும் வருட ஆரம்பத்தில் இடம்பெறும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில் பிரதான கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி சபைகளிலுள்ள தமது ஆதரவாளர்களை மஹிந்த ராஜபக்ச நேற்று அவசரமாக கொழும்பிற்கு அழைத்திருந்தார்.

அதில் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வண்ணியாராச்சி,  முன்னாள் மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்ஜித் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கிராம மட்டத்தில் மக்களிடையே காணப்படுகின்ற அரசியல் நிலைவரம், புதிய கட்சி ஆரம்பிப்பதற்கான அடித்தள வேலைகளும், அதனுடன் சம்பந்தப்பட்ட விமர்சனங்களும் என்பன குறித்து தமது ஆதரவாளர்களுடன் மஹிந்த ராஜபக்சவும், பெசில் ராஜபக்சவும் நீண்டநேரம் பேச்சில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை எதிர்வரும் 28ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக கண்டியிலிருந்து ஆரம்பிக்கவிருக்கும் தொடர் பேரணி குறித்தும் இதன்போது நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.