வடகொரியாவுக்கு மரண அடி

416 0

201607131329156130_SKorea-US-select-site-for-THAAD-anti-missile-system_SECVPF (1)வடகொரியாவின் ஏவுகணைகளை தாக்கி அழிக்க அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் அமைக்கப்படவுள்ள ஏவுகணை தடுப்பு கேடயத்தை (Terminal High Altitude Area Defence (THAAD) system) நிறுவும் இடத்தை தென்கொரியா இன்று தேர்வு செய்துள்ளது.

கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.

வடகிழக்கு ஆசிய நாடுகளான தென்கொரியாவும், வடகொரியாவும் தங்களது ஆயுத பலத்தை நிலைநாட்ட பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை வடகொரியா அவ்வப்போது பரிசோதித்து வருகிறது.

அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு இதுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன.

இதன்காரணமாக அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.

அவ்வகையில், வடகொரியா சமீபத்தில் கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து சக்திவாய்ந்த ஏவுகணையை பரிசோதித்ததாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

வடகொரியாவின் தொடர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் கவன்களை (பொறி) நிலைநிறுத்த அமெரிக்காவும் தென்கொரியாவும் சமீபத்தில் தீர்மானித்தன.

வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து, தென் கொரியாவில் ஏவுகணை தடுப்பு கேடய அமைப்பை (Terminal High Altitude Area Defence (THAAD) system) ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை செய்துகொண்டுள்ளன. இந்த ஏவுகணை தடுப்பு அமைப்பு எப்போது அங்கு நிறுவப்படும்? என்று இருநாடுகளும் அறிவிக்காமல் இருந்தன.

இதற்கிடையில், தென்கொரியாவில் இந்த ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ள இடம் தெரியவந்த பின், அதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்போம் என்று வடகொரியா மிரட்டியது.

அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கூட்டாக நிறுவவுள்ள ஏவுகணை தடுப்பு கேடயத்தை ஈவிரக்கமற்ற தாக்குதல் மூலம் அழித்து நிர்மூலம் ஆக்குவோம். இதை நிறுவ முயற்சிக்கும் தென்கொரியா மிகவும் பரிதாபத்துக்குரிய பேரழிவை சந்திக்க நேரிடும் எனவும் வடகொரியா அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் எச்சரித்தது.

மேலும், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து நிறுவவுள்ள ஏவுகணை தடுப்பு கேடய அமைப்பை ஈவிரக்கமற்ற தாக்குதல் மூலம் அழித்து நிர்மூலம் ஆக்குவோம் என வடகொரியா ராணுவ அமைச்சகமும் மிரட்டியது.

இந்த நிலையில், தென்கொரியாவின் தென்கிழக்கு மாகாணங்களில் ஒன்றான சியோங்ஜு பகுதியில் ஏவுகணை தடுப்பு கேடய அமைப்பை ஏற்படுத்த தென்கொரியா இன்று தீர்மானித்துள்ளது.

இந்த கேடயத்தை இங்கு அமைப்பதன் மூலம் தென்கொரிய மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு மடங்கினரையும், அணு மின் நிலையங்கள், எண்ணெய் கிடங்குகள் போன்றவற்றையும் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க முடியும் என தென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.