10 ஆயிரம் சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க அமெரிக்கா திட்டம்

405 0

201607131316352970_US-Will-Welcome-Target-Of-10000-Syria-Refugees-John-Kerry_SECVPFசிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் அங்கிருந்து ஏராளமான மக்கள் அகதிகளாக மேற்கு நாடுகளை நோக்கி தஞ்சமடைந்து வருகின்றனர். போரினால் பாதிக்கப்பட்ட பலர் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே, சிரியாவில் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் அகதிகள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிபர் பராக் ஒபாமா கூறியிருந்தார்.

அகதிகளை நாட்டிற்குள் அனுமதித்தால் தீவிரவாதம் தொடர்பான சிக்கல்கள் எழும் என்று எதிர்க்கட்சியினர் தரப்பில் விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில், ஒபாமா வாக்குறுதி அளித்தபடி 10 ஆயிரம் அகதிகளுக்கு அமெரிக்கா அடைக்கலம் கொடுக்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக வாஷிங்டனில் நடைபெற்ற ரமலான் விருந்து ஒன்றில் இதனை ஜான் கெர்ரி தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த 10 ஆயிரம் அகதிகளும் ஐக்கிய நாடுகள் முகாம்களில் இருந்து எடுக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளால் சோதனை செய்யப்பட்டு பின்னர் தான் தேர்வு செய்யப்படுவார்கள்.

அவசர கால உதவிகளை அமெரிக்கா அதிக அளவில் செய்து வருகிறது என்பதில் பெருமை கொள்கிறேன்.

ஐ.நா. முகாம்களில் அமெரிக்க அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்டவர்கள் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்படுவார்கள். அவர்களில் பெரும்பாலும், விதவைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தான் இருப்பார்கள்.இவ்வாறு  ஜான் கெர்ரி தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகள் பயணத்தின் முதற்கட்டமாக வரும் வெள்ளிக்கிழமை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு சென்று அங்கு அதிபர் விளாதிமர் புதினுடன் சிரிய விவகாரம் குறித்து ஆலோசனை செய்கிறார்.