ஷிராஸ் நூர்தீனின் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன் – காணாமல்போனோர் பற்றிய அலுலவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த

132 0

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன் ஆணைக்கு அமைவாகச் செயற்படவில்லை என்று அண்மையில் பதவி விலகிய ஆணையாளர் ஷிராஸ் நூர்தீனின் நான் முற்றாக மறுக்கின்றேன்.

இதுவரையான காலமும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோரின் எவ்வித தலையீடுகளுமின்றி எமது அலுவலகம் சுயாதீனமாகச் செயற்பட்டுவருகின்றது என்று காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்தார்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர்களில் ஒருவராகப் பதவிவகித்த ஷிராஸ் நூர்தீன் சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பான ஆண்டறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் கிளைக்கட்டமைப்பிற்கு அனுப்பப்படவேண்டியிருந்தபோதிலும், அது உரியவாறு அனுப்படவில்லை என்றும், சுயாதீனமான முறையில் செயற்படவேண்டிய காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் நீதியமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களின் தலையீடுகள் காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டியிருந்த அவர், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களின்மீது இரக்கத்துடன் செயற்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக 2017 ஆம் ஆண்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகச்சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட ஆணைக்கு அமைவாக அவ்வலுவலகம் இயங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மையளிக்கக்கூடியவகையிலான முன்னேற்றகரமான நடவடிக்கைகளை முன்னெடுக்காத காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் அங்கம்வகிப்பதில் பயனில்லை என்பதனாலேயே அதிலிருந்து தான் விலகியதாகவும் கூறியிருந்தார்.

முன்னாள் ஆணையாளர் ஷிராஸ் நூர்தீனின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்தவிடம் வினவியபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார்:

நாட்டிலுள்ள நீதிமன்றங்களை சுயாதீனக்கட்டமைப்புக்கள் என்று கூறுகின்ற போதிலும், அவற்றுக்கு அவசியமான நிதி உள்ளிட்ட ஏனைய வளங்கள் அமைச்சின் ஊடாகவே வழங்கப்படுகின்றது.

அதேபோன்று காணாமல்போனோர் பற்றிய அலுவலகமும் நிதி அடிப்படையில் சுயாதீனமாகச் செயற்படக்கூடிய கட்டமைப்பல்ல. எனவே நீதியமைச்சின் ஊடாக எமது அலுவலகத்திற்கு அவசியமான நிதி வழங்கப்படுவதுடன், ஊழியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான அனுசரணையும் வழங்கப்படுகின்றது.

எனினும் நான் இதன் தவிசாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து தற்போதுவரை ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எமது அலுவலகத்தின் செயற்பாடுகளில் எவ்வித தலையீடுகளையும் மேற்கொண்டதில்லை.

இதுவரையான காலத்தில் நான் அவர்களை நேரில் சந்தித்ததுமில்லை. அதேபோன்று நீதியமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் போன்றோரும் எமக்கு எவ்வித அழுத்தங்களையும் பிரயோகித்ததில்லை.</p>
<p>மாறாக காணாமல்போனோர் அலுவலகம் சுயாதீனமாகவும் செயற்திறனுடனும் இயங்குவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கியிருக்கின்றார்கள்.

;எனவே காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன் ஆணைக்கு அமைவாக இயங்கவில்லை என்ற ஷிராஸ் நூர்தீனின் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கின்றேன்.

எமது அலுவலகத்தில் பதவி வகிப்பதற்கு முன்னதாக ஷிராஸ் நூர்தீன் இதுபோன்றதொரு கட்டமைப்பில் பணியாற்றியிருக்கவில்லை என்பதால், அவர் இதன் நடைமுறைகள் தொடர்பில் அறியாதிருக்கலாம் அல்லது குழப்பமடைந்திருக்கலாம்.

இல்லாவிட்டால் வேறு ஏதேனும் அழுத்தங்கள் இருந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.