நிதி உதவிக்காக பிரதமர் விசேட கலந்துரையாடல்

29 0
நிதி உதவிக்காக வெளிநாட்டு மன்றம் ஒன்றை அமைப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஜப்பானியத் தூதுவர், அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் சீனத் தூதுவர் ஆகியோருடன் பிரதமர் பூர்வாங்கச் சந்திப்பொன்றை நடத்தினார்.

இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பின் போது, ​​இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக டோக்கியோ செல்ல தயார் என ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதுவருடனான கலந்துரையாடலின் போது, ​​அமெரிக்க திறைசேரித் திணைக்களக் குழுவின் இலங்கை விஜயம் தொடர்பிலும் பிரதமர் விக்கிரமசிங்க கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

அரசியலமைப்பின் 19வது திருத்தம் மற்றும் பாராளுமன்றத்தில் கண்காணிப்பு குழுக்களை பலப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீன தூதுவர் பிரதமர் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானியா செல்வதற்கு முன்னர், பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இலங்கையின் நிலைமை குறித்து பிரித்தானிய அரசாங்கத்திற்கு விளக்கமளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர்களான காஞ்சன விஜேசேகர, சுசில் பிரேமஜயந்த மற்றும் எரிசக்தி அமைச்சின் மற்றும் பெற்றோலிய வள அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் அவசர கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

அதில் சாகல ரத்நாயக்கவும் கலந்துக் கொண்டிருந்தார்..

நாட்டில் தற்போது நிலவும் எரிசக்தி நெருக்கடி மற்றும் மக்களின் சுமையை குறைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவது மற்றும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஆராய ஐந்து பேர் கொண்ட விசேட குழுவொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

இதன்படி, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பொருட்களை வழங்குவது குறித்து ஆராய்வதற்காக வஜிர அபேவர்தன மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெற்றோலிய விநியோகத்தை கையாள்வதற்காக சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் ஆராய்வதற்காக ருவான் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

உர விநியோகம் தொடர்பில் ஆராய அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.