பழுதடைந்த அரிசியை நுகர்வோருக்கு விநியோகிக்க திட்டம்

391 0

வர்த்தக அமைச்சினால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வெயன்கொட தனியார் களஞ்சியசாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள 11ஆயிரம் தொன் அரிசி பாவனைக்கு உதவாவகையில் பழுதடைந்துள்ளது. அதனை மீள் சுழற்சி செய்து நுகர்வோருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதுதொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என நுகர்வோர் அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் துஷான் குணவர்த்தன தெரிவித்தார்

இலங்கை மனிதநேய கட்சி ஞாயிற்றுக்கிழமை (8) ;கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் அரிசி விலையை கட்டுப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன வர்த்தக அமைச்சராக இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மியன்மாரில் இருந்து அரிசி இறக்குமதி செய்திருந்தார்.

வர்த்தக அமைச்சினால் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட 11ஆயிரம் தொன் அரிசி வெயன்கொட பிரதேசத்தில் தனியார் களஞ்சியசாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த அரிசி நுகர்வொருக்கு பாவனைக்கு எடுக்க முடியாதளவுக்கு பழுதடைந்துள்ளது.

என்றாலும் குறித்த அரிசி தொகையை தற்போது வெளியில் கொண்டுவந்து அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கை எடும்பெறுவதாகவும் அதனை நுகர்வோருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது. அதனால் இதுதொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் நாட்டில் அரிசியின் விலை பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில் இந்தளவு பாரியதொரு தொகை அரிசியை எந்தவித பொறுப்புல் இல்லாமல் களஞ்சியப்படுத்தி வைத்திருப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதேபோன்று மியன்மாரில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த அரிசி கப்பலை துறைமுகத்தில் இருந்து உரிய காலத்தில் வெளியேற்றுவதற்கு முடியாமல் போனதால் அதற்காக 3அரை மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கி இருக்கின்றது.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையிலும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் பொறுப்பில்லால் செயற்பட்டு வருகின்றனர்.

மேலும் இன்று அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூற யாரும் இல்லை. எடுக்கப்படும் தீர்மானங்கள் பிழைத்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு செல்கின்றனர். நிதி அமைச்சர் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சில பிழையான தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு அதற்காக மன்னிப்பு கோரி இருந்தார். மன்னிப்பு கோருவதன் மூலம் இதனை விட்டுவிடமுடியுமா?. இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அதேபோன்று வர்த்தக அமைச்சினால் இயற்கை உரம் உற்பத்தி செய்ய 30மில்லியன் ரூபா செலவழித்து கொழும்பில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருக்கின்றது. நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில் இவ்வாறானதொரு வேலைத்திட்டம் தற்போது தேவையா என கேட்கின்றோம். அத்துடன் வேலைத்திட்டம் தோல்வியடைந்தால், தவறுதலாக எடுக்கப்பட்ட தீர்மானம் என தெரிவித்து அதிகாரிகள் இதில் இருந்து ஒதுங்கிக்கொள்வார்கள். ஏனெனில் பொறுப்புக்கூற யாரும் இல்லை.

மேலும் அரசாங்கம் இன்னும் தங்களுக்கு அதிகாரம் இருப்பதாகவே நினைத்துக்கொண்டிருக்கின்றது. அவசரகால சட்டத்தை கொண்டுவந்து அரசாங்கத்துக்கு எதிராக போராடும் மக்களை கட்டுப்படுத்தலாம் என்றே அரசாங்கம் நினைத்துக்கொண்டிருக்கின்றது. அவசரகால சட்டம்தான் அரசாங்கத்தின் இறுதி துரும்பாகும். அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியிருப்பதால் சர்வதேச ரீதியில்  பாரிய தலைகுனிவை அரசாங்கம் ஏற்படுத்தி இருக்கின்றது. இதனால் சர்வதேசத்தின் உதவிகள் தடைப்படும் அபாயம் இருக்கின்றது என்றார்.