சீரிய செயல்பாடுகளால் விமர்சனங்களுக்கு செம்மையான பதிலடி கொடுப்போம்- முதல்வர் ஸ்டாலின்

293 0

கொரோனா இரண்டாவது அலையிலிருந்து மக்களைக் காத்த திமுக அரசு, மூன்றாவது அலையையும் கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில், கழக வேட்பாளர்களும், தோழமைக் கட்சி வேட்பாளர்களும், ஒவ்வொரு வாக்காளரையும் தவறாமல் நேரில் சந்தித்து, வேண்டுகோள் விடுத்து, தங்கள் வெற்றியை உறுதிசெய்யும் விளக்கப் பரப்புரையை மேற்கொள்கின்ற நேரம் இது.
வேட்பாளர்களையும், அவர்களுக்காக அரும்பாடுபடுகிற உடன்பிறப்புகளையும், வெற்றியை மனமுவந்து வாரி வழங்கவிருக்கிற வாக்காளர்களையும், உங்களுடன் இணைந்து நானும் நேரில் சந்திக்கவே பெரிதும் விரும்புகிறேன். முதலமைச்சர் என்ற பொறுப்பை இதே வாக்காளர்கள்தான் கடந்த ஆண்டு மே மாதம் என்னை நம்பி, உளப்பூர்வமாக ஒப்படைத்தார்கள். அவர்கள் வைத்த நம்பிக்கை, ஒரு நாளும் ஒரு சிறிதும் வீணாகாதபடி, ஒட்டுமொத்த ஆற்றலையும் பயன்படுத்தி தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். நிறைவேற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.
கொரோனா இரண்டாவது அலையிலிருந்து மக்களைக் கண்ணை இமை காப்பது போல் காத்த நமது அரசு, மூன்றாவது அலையையும் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. அது மேலும் பரவாமல் இருப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைக் காக்க வேண்டிய கடமை முதலமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள எனக்குக் கூடுதலாகவே இருக்கிறது.
தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள அளவைக் கடந்த பரப்புரைக் கூட்டங்களில் நான் பங்கேற்றால், அது கொரோனா காலக் கட்டுப்பாடுகளுக்கு மாறானதாக அமைந்துவிடும்.
தேர்தல் பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை
எந்தவொரு ஆக்கப்பூர்வமான – பொறுப்பான விமர்சனத்தையும் முன்வைக்க முடியாத எதிர்க்கட்சியினர், ஈரைப் பேனாக்கி இட்டுக் கட்டும் வேலையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். வெறும் வாயையே மென்று சுகம் காணும் அவர்களுக்கு, வெல்லமும் அவலும் கலந்து வாயில் போட்டது போலாகிவிடும் என்பதே என் எண்ணம்.
விமர்சனங்களை நேரடியாக எதிர்கொள்ள எப்போதும் நான் தயங்கியதில்லை. உங்களில் ஒருவனான என் மீது, சட்டமன்றத் தேர்தல் களத்திலும், அதற்கு முன்பும், என்னென்ன விமர்சனங்களை வைத்தார்கள் என்பதை உடன்பிறப்புகளாகிய நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். அவர்களின் விமர்சனங்களுக்கு, நம்முடைய சீரிய செயல்பாடுகளால், செம்மையான பதிலடி தர வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். அதனால், நேரடிப் பரப்புரை நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, காணொலிப் பரப்புரைக் கூட்டங்கள் வாயிலாக, உடன்பிறப்புகள் மற்றும் வாக்காளர்களின் ஒளிமுகம் கண்டு, அகம் மிக மகிழ்கிறேன்.
வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்புவோரின் வாய்ஜாலச்சதியினை முறியடித்து, நம் சாதனையைப் பரப்புவோம். சாதனைகளால் நிரம்பிய வாட்ஸ்அப் செய்திகள் நூறாக, ஆயிரமாக, இலட்சங்களாகப் பகிரப்படும்போது அது வெறும் வாட்ஸ்அப் செய்தியன்று. கழகத்திற்கு ஆதரவு பெருக்கிடும் வாக்குகளுக்கான அச்சாரம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் வாக்கு சேகரிக்கும் பணியில் இருக்கும் ஒவ்வொரு உடன்பிறப்பும், இதனை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
இன்றைய அறிவியல் – தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, தனிநபர் ஊடகங்களாக விளங்கும் சமூக வலைத்தளங்களையும் இணைய வழி நிகழ்வுகளையும், நெறி பிறழ்ந்திடாது, முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு பரப்புரை செய்திடல் வேண்டும். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை, ஒன்று விடாமல் கவனமாகப் பின்பற்றிட வேண்டும்.
தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்குமான உரிமைகளை உறுதியாக நிலைநாட்டும் நமது இலட்சியப் பயணத்தின் வெற்றி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் முழுமையாக அமைந்திட, உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் களப் பணியாற்றுங்கள். கழகத்தினருடனும் தோழமைக் கட்சியினருடனும் ஒருங்கிணைந்து உற்சாகமாகப் பணியாற்றுங்கள். மக்களிடம் செல்லுங்கள்; மகத்தான வெற்றியை அவர்கள் மனமுவந்து தருவார்கள்!
இவ்வாறு அவர்  கூறி உள்ளார்.