தமிழக தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்க வேண்டும்- திருமாவளவன்

356 0

201607121027008216_Thirumavalavan-Says-To-grant-authority-to-the-State-Election_SECVPFகடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது -உள்ளாட்சி தேர்தலை மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகித்தே சந்திப்பது என்று கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து விரிவாக ஆலோசிப்பதற்காக வரும் 16-ந்தேதி விழுப்புரத்தில் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. உள்ளாட்சியின் அனைத்து நிலையில் உள்ள துணைத்தலைவர் பதவி இடங்களிலும் இடஒதுக்கீடு வேண்டும். சென்னை மாநகராட்சியை தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்க வேண்டும் என்பது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.

இதற்கு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யும்போது அரசு நல்ல பதிலை அளிக்கும் என்று நம்புகிறோம். அதேபோல் நகராட்சி, மாநகராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் முறையை அமலாக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் போல் சுதந்திரமான அமைப்பாக செயல்படும் வகையில் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.

தமிழக அரசு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பொது, தனித் தொகுதிகளை தேர்வு செய்து தேர்தலை நடத்துவது என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன்படி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள நிலையே தொடரும் என தமிழக அரசு அறிவித்து உள்ளதில் உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறோம்.

எனவே, சட்டப்பூர்வமாக தேர்தல் எவ்வாறு நடைபெற வேண்டுமோ, அப்படியே தேர்தலை நடத்த வேண்டும். அதாவது புதிய சுழற்சி முறையிலான ஒதுக்கீட்டின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். சுவாதி கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட போது அதனை நாங்கள் வரவேற்றோம். ஆனால் தற்போது கிடைக்கும் நம்பகமான செய்திகள் காவல்துறைக்கு எதிராகவும், சாட்சியம் அளித்ததாக கூறப்படுபவர்கள் முன்னுக்குப்பின் முரணாக கூறி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

எனவே இதில் உண்மையை வெளிக்கொண்டு வரவே சி.பிஐ. விசாரணையை கோரி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.