தமிழகத்தில் இன்று 10-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

255 0

தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் விதமாக, 9 கட்டங்களாக மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும்விதமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கிய மக்கள், பிறகு ஆர்வம் காட்டத் தொடங்கினர். இதனால், பொது மக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் தடுப்பூசி மெகா முகாம்களுக்கு  ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஏற்கனவே 9 கட்டங்களாக முகாம் நடைபெற்ற நிலையில், இன்று 10-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 2000 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்கிறது. 2-வது தவனை தடுப்பூசி செலுத்த வேண்டிய 75 லட்சம் பேர் முகாம்களை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.