நாகையில் குறுவை சாகுபடி மானியத்துக்கு லஞ்சம் வாங்கிய அதிகாரி

361 0

201607111118219630_Agriculture-assistant-bribe-buying-for-kuruvai-cultivation_SECVPFடெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டும் ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் ஆற்று பாசனத்தை நம்பி விவசாயம் பார்ப்பவர்கள் குறுவை சாகுபடியை கைவிட்டு சம்பா பயிரிட தயாராகி வருகின்றனர். நிலத்தடி நீரைக்கொண்டு குறுவை விவசாயம் செய்பவர்களை ஊக்குவிக்க எந்திரம் மூலம் நாற்று நடும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4000 உதவித்தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாகை மாவட்டத்திற்கு 30 ஆயிரம் ஏக்கர் விவசாயத்திற்கு ரூ.12 கோடி மானியம் அறிவித்தது. எந்திரம் மூலம் நடவு செய்த விவசாயிகள் மானியம் பெறுவதற்கு, நாற்று நடவு செய்தது குறித்து போட்டோ, சிட்டா அடங்கல் போன்ற விபரத்தை வேளாண்மை உதவியாளரிடம் அளித்து அவர் அளிக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்கவேண்டும். அதிகாரிகள் பார்வையிட்டுவிட்டு அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைப்பார்கள்.

நாகை மாவட்டம், குத்தாலம் வேளாண் விரிவாக்க அலுவலகத்துக்குட்பட்ட கோமல் பகுதி வேளாண் உதவியாளர் கண்ணன் என்பவர் கோமல், வழுவூர், மேக்கிரிமங்கலம், பழையகூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடவு மானியத்திற்காக விண்ணப்பதாரர்களை வற்புறுத்தி ஏக்கர் ஒன்றுக்கு ரூ.500 வீதம் வசூல் செய்ததாகவும், பணம் தர மறுத்த விவசாயிகளின் விண்ணப்பத்தை நிராகரித்ததாவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் வேளாண் உதவியாளர் கண்ணன் விவசாயிகளிடம் பணம் பெறுவதை ரகசியமாக செல்போனில் பதிவு செய்துள்ள விவசாயிகள் வேளாண்மைதுறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

நாகை மாவட்டம் முழுவதும் இதுபோன்ற வசூல் வேட்டை நடப்பதாகவும் உடனடியாக வேளாண்துறை அதிகாரிகளிடம் அரசு விசாரித்து விவசாயிகளிடம் லஞ்சம் பெற்ற அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், லஞ்சமாக வசூலித்த தொகையை திருப்பித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.