க.பொ.த சாதாரண தர, உயர்தரம், பல்கலை 1ஆம் வருட வகுப்புகளை விரைவில் ஆரம்பிக்க தீர்மானம்

147 0

க.பொ.த சாதாரண உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கொவிட் தொற்று பாடசாலை மாணவர்களின் கல்வியை கடுமையாகப் பாதித்துள்ள நிலையில் க.பொ.த. சாதாரண தர, உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (29) காலை கொவிட் தடுப்பு செயலணியுடனான காணொளிக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, அடுத்த வாரம் முதல் இந்தப் பிரிவுகளை தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வகுப்புகள் ஆரம்பமாகும் திகதியை கல்வி அமைச்சே அறிவிக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, இது குறித்து அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டு, பாடசாலைகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகளை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பல்கலைக்கழகங்களின் முதலாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்குமாறு சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.