3 வருடங்களின் பின் சிக்கிய கொலைச் சம்பவம்-மர்மம் துலக்கிய சி.ஐ.டி.

245 0

ஐக்கிய நாடுகள் சபையில் பல வருடங்களாக பட்டய பொறியியலாளராக கடமையாற்றிய, உலக வங்கியின் இலங்கை கிளையின் முன்னாள் தொழில் நுட்ப பொறியியலாளரான வீரபத்தராலலாகே சமன் விஜேசிறி (63) கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் களப்பொன்றினுள் மறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சி.ஐ.டி. விடயங்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளது.

மூன்று வருடங்களின் பின்னர், இந்த குற்றச் செயல் தொடர்பில் சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலை மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவு இந்த விடயங்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ள நிலையில், கொல்லப்பட்டவரின் உறவினர் ஒருவர் உட்பட மூவரை அவர்கள் கைது செய்துள்ளனர். குறித்த மூவரும் சிலாபம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியிலிருந்து  இலங்கை திரும்பிய வர்த்தகர் என கூறப்படும்  பெராஜ் லிங்கன்,  வர்த்தகரான ருவன் சந்தன,  கொல்லப்பட்ட பொறியியலாளரின் உறவினரான  நிஹால் தேவப்பிரிய ஆகியோரே இவ்வாறு சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்ச் செய்யப்பட்ட சந்தேக நபர்களாவர். இந்நிலையில் சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விசாரணைகளின் போது, கொல்லப்பட்ட வர்த்தகர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக நம்பவைக்கும் படியாக, விமான நிலைய தரவுக் கட்டமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தமை சி.ஐ.டி. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.

கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்,  சமன் விஜேசிறி எனும் குறித்த கோடீஸ்வர பொறியியலாளர், கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்ப்ட்ட பின்னர் சிலாபம் கலப்பில் மூழ்கடிக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலம் அளித்துள்ளதாகவும் சி.ஐ.டி. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

சிலாபம், காக்கை பள்ளி – இதிகொடவிலவைச் சேர்ந்த பொறியியலாளரான சமன் விஜேசிறி கணாமல் போயுள்ளதாக,  கடந்த 2018 செப்டம்பர் 18 ஆம் திகதி, அவரது தோட்டத்தின் பதுகாப்பு ஊழியர் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

இது தொடர்பில் காணாமல் போயுள்ளதாக கூறி, பீ அறிக்கை ஊடாக சிலாபம் நீதிமன்றுக்கு பொலிசாரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதும் மேலதிக விசாரணைகள் சரியக இடம்பெறவில்லை. இந்நிலையில் இது தொடர்பில் பொறியியலாளர் சமன் விஜேசிறியின் உறவினரான ஆர். ஜயவீர என்பவர்  பொலிஸ் ஆணைக் குழுவுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு முறையிட்டுள்ளார்.

இதனையடுத்தே இவ்விசாரணைகள் சி.ஐ.டி.யிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இது குறித்த விசாரணைகள் சி.ஐ.டி.  பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவினால்  அதன் பணிப்பளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சார் ரொஹான் பிரேமரத்னவின் ஆலோசனைக்கு அமைய, புதிதாக உருவாக்கப்ப்ட்ட மனிதப் படுகொலை மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே மனிதப் படுகொலைகள் மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பணிப்பாளர்  பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின்  ஆலோசனையின் பேரில் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள டி சில்வா தலைமையிலான பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளிலேயே தற்போது சமன் விஜேசிறியின் கொலை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள் சந்தேக நபர்களில் முதல்சந்தேக நபரான  வர்த்தகர் என கூறப்படும்  பெராஜ் லிங்கன் என்பவர் சமன் விஜேசிறியின் 50 ஏக்கர் விசாலமான  தோட்டத்தில் அமைந்துள்ள  வாகன சேர்விஸ் நிலையத்தை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டிருந்தவர் எனவும்,  கைது செய்யப்பட்டுள்ள உறவினருக்கு சமன் விஜேசிறி, ஜா எல பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றினை  பொறுப்பளித்திருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இதுவரையிலான விசாரணைகளில், சமன் விஜசிறி, அவுஸ்திரேலியாவில் சில காலம் வாழ்ந்த நிலையில், சிங்கப்பூர் பெண் ஒருவரை அவர் திருமணம் செய்துள்ளார்.

அவருக்கு பிள்ளைகள் இல்லை என்பதால், வளர்ப்பு பிள்ளைக்கு தனது சொத்துக்களை எழுதி வைக்க  சமன் விஜேசிறி தீர்மானித்துள்ள நிலையிலேயே இந்த கொலை அச்சொத்துக்களை  அபகரிக்கும் நோக்கில் நடந்தேறியுள்ளதாக சி.ஐ.டி.யினர் கண்டறிந்துள்ளனர்.

பொறியியலாளர் சமன் விஜேசிறி கொலைச் செய்யப்பட்ட பின்னர், சம்பவம் இடம்பெற முன்னரான திகதியொன்றினை இட்டு, சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் முதல் சந்தேக நபரின் பெயரில் போலி அட்டோனி பத்திரம் ஒன்று தயார் செய்யப்பட்டு சொத்துக்களின் உரிமம் மாற்றப்பட்டுள்ளதை விசரணையளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அந்த போலி அட்டோனி பத்திரம் ஊடாக, பொறியியலாளரின் அனைத்து சொத்துக்களையும் விற்கும் அதிகாரம் பிரதான சந்தேக நபருக்கு உள்ளதக காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் கொலை செய்யப்பட்டுள்ள பொறியியலாளர், எந்த நேரத்திலும் எந்த நாட்டுக்கும் சென்றுவரும் வசதிபடைத்தவர் என்ற ரீதியில், அவரின் கொலையை மறைத்து அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டதாக நம்பும் வண்ணம் சாட்சிகள் சந்தேக நபர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொலை செய்யப்பட்டவர் வெளிநாடு சென்றுள்ளதாக  நம்பவைக்க, 2019 அம் ஆண்டு மே 28 ஆம் திகதி யூ.எல். 225 எனும் விமானத்தில்  வெளிநாடு சென்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல் கட்டமைப்பில் தரவுகள் உட்செலுத்தப்பட்டுள்ளன.

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவருக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் வழங்கி இதற்கான நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  போலி அட்டோனி பத்திரம் தயாரிக்க உதவி சட்டத்தரணி,  பொய்யான தகவல்களை தரவுக் கட்டமைப்பில் உட் செலுத்திய குடிவரவு குடியகல்வு அதிகாரி உள்ளிட்ட மேலும் சிலரைக் கைதுசெய்ய சி.ஐ.டி. விஷேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சிலாபம் களப்பில் மூழ்கடிக்கப்பட்டதாக கூறப்படும் சந்தேகம் தொடர்பிலும்  மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.